கற்றாழை, அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஈரப்பதமாக்கும் பண்புகளுக்காக அறியப்படுகிறது. ஆனால் இது குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு பாதுகாப்பானதா? குழந்தைகளுக்கு கற்றாழை ஜெல்லை பாதுகாப்பாக எவ்வாறு தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது, அதன் முக்கிய பயன்கள் மற்றும் பாதுகாப்பு குறிப்புகள் பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்.
கற்றாழை ஜெல் எப்படி பயன்படுத்துவது?
கற்றாழை மடல்களை கவனமாக நீக்கி, உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதியை வெட்டி எடுக்கவும். அதை ஓடும் நீரில் நன்கு அலசிய பின், ஐந்து முறை தண்ணீரில் அலசி மிக்ஸியில் மசித்து எடுக்கவும். பின்னர் சுத்தமான பாட்டிலில் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, தேவைப்படும்போது அறை வெப்பநிலைக்கு வந்ததும் பயன்படுத்தலாம். கடைகளில் வாங்கும் கற்றாழை ஜெல்லைத் தேர்வு செய்யும் போது, சுத்தமான மற்றும் இரசாயனங்கள் இல்லாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
குழந்தைகளுக்கு கற்றாழையின் முக்கிய பயன்கள்
- டயப்பர் சொறி வெடிப்புகளை தடுக்கும்: கற்றாழையில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் தொற்று எதிர்ப்பு திறன்கள், குழந்தையின் சருமத்தை அமைதிப்படுத்தி, டயப்பர் சொறியிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
- அரிக்கும் தோலழற்சிக்கு (எக்ஸிமா) கற்றாழை: குழந்தையின் சருமத்தில் ஏற்படும் சிவப்பு, அரிப்பு, புள்ளி போன்ற எக்ஸிமாவுக்கு கற்றாழை ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இது சருமத்தின் ஈரப்பதத்தை மேம்படுத்துகிறது.
- குழந்தையின் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது: நீர்ச்சத்து கொண்ட கற்றாழை, குழந்தையின் சருமத்தை நீரேற்றமாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தடிப்புகள் மற்றும் பிற தோல் நோய்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க செய்கிறது.
- பூச்சி கடித்தால் முதலுதவி: பூச்சி கடித்தல், சிறு காயங்கள், கீறல்கள் போன்ற பாதிப்புகளின் போது கற்றாழை நிவாரணம் அளிக்கிறது. இது காயங்கள் உலராமல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி புண்களை குணப்படுத்துகின்றன.
- குழந்தைக்கு ஷாம்புவாக கற்றாழை: தரமான கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து நீரில் கலந்து குழந்தையின் உச்சந்தலையில் தடவி விடலாம். இது உச்சந்தலையின் ph சமநிலையை பராமரித்து, தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது.
கற்றாழை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை
- கற்றாழை வீட்டில் தயாரிக்காமல் கடைகளில் வாங்கினால் சுத்தமான ஒன்றை தேர்வு செய்யவும்.
- குழந்தைக்கு கற்றாழை பயன்படுத்துவதற்கு முன்பு அவர்களின் சருமத்தில் ஒவ்வாமை உண்டு செய்கிறதா என்பதை கவனிக்கவும்.
- பாதகமான பக்கவிளைவுகள் இல்லை என்றால் வறண்ட சருமத்தில் மென்மையாக பயன்படுத்துங்கள்.
- ஆறு மாதங்களுக்கு முன்பு குழந்தைகளுக்கு கற்றாழை பயன்படுத்த வேண்டாம்.
- கற்றாழை சில குழந்தைகளுக்கு இலேசான தோல் எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை உண்டு செய்யலாம்.
- கற்றாழை பயன்படுத்தும் போது குழந்தையின் கண், வாய், மூக்கு பகுதியில் படாமல் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும்.