சாணக்கியர் வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் ஒரு தனிநபர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், யாரிடம் கவனமாக இருக்க வேண்டும், நிதிநிலை மேம்பட என்ன செய்ய வேண்டும் போன்ற முக்கியமான நீதி நெறிகளை வகுத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த அறிஞராகவும், மௌரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்த மௌரியரின் வழிகாட்டியாகவும் திகழ்ந்த சாணக்கியரின் போதனைகள், குடும்ப வாழ்க்கை, தொழில், வியாபாரம், வேலை என அனைத்திற்கும் பொருந்தும்.
உறவுகளின் எதார்த்த குணத்தை அறிதல்
சாணக்கிய நீதியின்படி, ஒருவரின் வாழ்க்கைத் துணை, உடன் பிறந்தவர்கள், நண்பர்கள் மற்றும் பணியாளர்கள் போன்றோரின் எதார்த்தமான குணத்தை சில சூழ்நிலைகளில் மட்டுமே உண்மையாக அறிந்து கொள்ள முடியும். கடினமான காலகட்டங்களில் உறவினர்களின் ஆறுதலும், உதவியும், நிதி இழப்பு மற்றும் அவமானம் ஏற்படும் போது மனைவியின் குணமும், ஒரு பணியாளன் கடினமான வேலையை எவ்வளவு திறமையாகக் கையாள்கிறான் என்பதும் அவர்களின் உண்மையான குணத்தை வெளிப்படுத்தும்.
- வேலையாட்களின் திறன்: ஒரு பணியாளரை நியமிக்கும்போது, பணியிடத்தில் ஒரு கடினமான வேலையை எவ்வளவு திறமையாகக் கையாள்கிறார் என்பதிலிருந்து அவரது உண்மையான திறனை கண்டறியலாம்.
- உறவுகளின் ஆதரவு: ஒருவர் ஏதேனும் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொண்டால், அதிலிருந்து மீள்வதற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் செயல்பாடு எவ்வாறு உதவுகிறது என்பதைப் பொறுத்து அவர்களின் குணத்தைக் கண்டறியலாம்.
- மனைவியின் உண்மை காதல்: தன் வாழ்க்கையில் சேமித்த பணத்தை எல்லாம் இழந்த நேரத்தில் தன் மனைவியின் உண்மையான அன்பு, அனுசரணை மூலம் வெளிப்படும்.
உண்மையான நண்பனின் இலக்கணம்
நிதி சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஒருவருக்கு நண்பன் மிகவும் அவசியம். உண்மையான நண்பன் யார் என்பதை சாணக்கிய நீதி தெளிவாக விளக்குகிறது.
- துன்பத்திலும், பஞ்சம் வந்தபோதிலும் உடனிருப்பவன்.
- எதிரிகள் துன்பம் ஏற்படும் போதும் துணையாக நிற்பவன்.
- அரசபையிலும், தகனம் செய்யும் இடத்திலும் உன்னுடன் இருப்பவன்.
- ஒருவரின் மரண நேரம் வரை அவரைக் காப்பாற்ற உறுதுணையாக இருக்கக்கூடியவனே உண்மையான நண்பனாகக் கருதப்படுகிறான்.