மழைக்காலம் வந்தாலே சளி, இருமல், காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சனைகள் அதிகமாகும். குறிப்பாக கப உடல்வாகு கொண்டவர்களுக்கு இது பெரும் தொந்தரவாக இருக்கும். ஆனால் கபம் தோஷம் அதிகரித்து சளி பிடிக்க, நாம் செய்யும் சில பொதுவான தவறுகளே காரணம் என ஆயுர்வேதம் கூறுகிறது. சாத்வீக் மூவ்மெண்ட்டின் யோகா பிரிவினர் இன்ஸ்டகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோவில், கபம் அதிகரிப்பதற்கான மூன்று முக்கிய காரணங்களையும், அதைத் தவிர்க்கும் வழிகளையும் விளக்கியுள்ளனர்.
மழைக்காலத்தில் கபம் அதிகரிப்பதற்கான காரணங்கள்
பருவ கால மாற்றங்களால் நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். மழைக்காலம் குளிர்ச்சியான வானிலையைக் கொண்டுவரும். இது ஆயுர்வேதத்தில் நீர், பூமி மற்றும் குளிர்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய கப தோஷத்தை அதிகரிக்கும். இந்த சமயத்தில் உடல் சோம்பல், எடை அதிகரிப்பு, நோயெதிர்ப்பு மண்டல பலவீனம் போன்ற அசௌகரியங்கள் ஏற்படும்.
பொதுவாக, மழைக்காலத்தில் பகல் தூக்கம் வருவதுண்டு. இது வளர்சிதை மாற்றத்தை தாமதப்படுத்தி, செரிமானத்தைப் பாதிக்கும். இதன் விளைவாக உடலில் நச்சுக்கள் குவியத் தொடங்கி, அதிகமாக கபத்தை உற்பத்தி செய்யும். இது சளி, இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
கப உற்பத்தியைக் கட்டுப்படுத்த செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்
-
1. வழக்கமான உடற்பயிற்சிகள்
மழைக்காலத்தில் சோம்பலாக உணர்ந்தாலும், தினசரி உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். இது உங்கள் ஜீரண சக்தியைத் தூண்டி, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். இதன் மூலம் உடலில் நச்சுக்கள் குவியாமல் தடுக்கப்பட்டு, கபம் சேருவது குறையும். கடினமான பயிற்சிகள் செய்ய வேண்டிய அவசியமில்லை; உங்களுக்குப் பிடித்த எளிய பயிற்சிகளைச் செய்தாலே போதும்.
-
2. பாக்கெட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல்
பாக்கெட் செய்யப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உடலில் கழிவுகள் சேருவதை அதிகரித்து, கப உற்பத்தியை அதிகரிக்கும். இவை நுரையீரல் முதல் குடல் வரை கபத்தை தேக்கி வைக்கும். அதற்கு பதிலாக, ஃபிரஷ்ஷான பழங்கள், நிறைய காய்கறிகள் மற்றும் முழு தானிய உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறான கருத்து; பழங்கள் சளியை வெளியேற்ற உதவுமே தவிர, உள்ளுக்குள் தேக்கி வைக்காது.
-
3. இரவு நேர தூக்கம்
இரவில் நன்றாகத் தூங்குவது கபத்தைக் குறைக்கும். பகலில் ஆக்டிவ்வாக இருக்கும் நமது உடலின் ஆற்றல் மட்டங்கள், இரவில் ஓய்வு நிலைக்குச் செல்லும்போது தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும். தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை ஆழ்ந்து தூங்குங்கள். நன்கு ஓய்வெடுப்பது உடலையும் மனதையும் சீராக வைத்திருக்கும். பகல் தூக்கத்தைத் தவிர்ப்பது உடலின் ஆற்றலை நாள் முழுவதும் தக்கவைத்து, கப உற்பத்தி செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும்.
மேற்கண்ட மூன்று விஷயங்களிலும் நாம் செய்யும் தவறுகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான உணவுகளைச் சேர்த்துக் கொண்டால், உடலில் கபம் சேருவதைத் தடுத்து, நுரையீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மழைக்காலத்தின் குளிர்ச்சியான வானிலை, நீர் மற்றும் பூமி சக்தியுடன் தொடர்புடைய கப தோஷத்தை அதிகரிக்கும். பகல் தூக்கம், குறைவான உடற்பயிற்சி, செரிமானப் பிரச்சனைகள் ஆகியவை உடலில் நச்சுக்களைக் குவித்து கபத்தை உற்பத்தி செய்யும்.
தினசரி உடற்பயிற்சி செய்தல், பாக்கெட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து புதிய உணவுகளை உட்கொள்ளுதல், மற்றும் இரவில் எட்டு முதல் பத்து மணி நேரம் வரை ஆழ்ந்து உறங்குதல் ஆகியவை கப உற்பத்தியைக் கட்டுப்படுத்த உதவும்.
இல்லை, அது ஒரு தவறான கருத்து. பழங்கள் உடலில் உள்ள சளியை வெளியேற்றவே உதவும். குறிப்பாக, அந்த பருவத்தில் கிடைக்கும் புதிய பழங்களை உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது.