கெமிக்கல் ஹேர் டைகளைத் தவிர்த்து, ஆரோக்கியமான முறையில் நரைமுடியை நிரந்தரமாக கருப்பாக்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் இயற்கை வழிகளை இந்த கட்டுரை விளக்குகிறது. புற்றுநோய் மற்றும் சருமப் பிரச்சனைகளைத் தவிர்க்க, கீழ்காணும் வழிமுறைகள் பாதுகாப்பான மற்றும் பலனளிக்கும் தீர்வுகளை வழங்குகின்றன.
1. நெல்லிக்காய் - கரிசலாங்கண்ணி ஆயில் ட்ரீட்மெண்ட்
தேவையான பொருட்கள்:
- நெல்லிக்காய் பொடி - 2 ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி இலை அல்லது பொடி - கால் கப்
- தேங்காய் எண்ணெய் - அரை கப்
செய்முறை:
ஒரு இரும்புக் கடாயில் தேங்காய் எண்ணையை ஊற்றி, மிதமான தீயில் வைத்து நெல்லிக்காய் பொடி மற்றும் கரிசலாங்கண்ணி பொடியைச் சேர்த்து காய்ச்சவும். பொடி கருகாமல் பார்த்துக்கொள்ளவும். ஆறியதும் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணையை லேசாக சூடு செய்து, தலையில் வேர்க்கால்கள் முதல் நுனி வரை அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்யவும். இரவு முழுவதும் ஊறவிட்டு காலையில் ஹெர்பல் ஷாம்புவால் அலசலாம். சைனஸ் உள்ளவர்கள் குளிப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக தேய்க்கலாம். வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்த நல்ல மாற்றத்தைக் காணலாம்.
நன்மைகள்:
நெல்லிக்காய் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிறைந்துள்ளது, முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது. கரிசலாங்கண்ணி மெலனின் உற்பத்தியை ஊக்குவித்து முடி வேர்களை பலப்படுத்துகிறது.
2. கறிவேப்பிலை - தேங்காய் எண்ணெய் கஷாயம்
தேவையான பொருட்கள்:
- ஃபிரஷ்ஷான கறிவேப்பிலை - 1 கைப்பிடி
- தேங்காய் எண்ணெய் - 100 மில்லி
செய்முறை:
இரும்புக் கடாயில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி, ஒன்றிரண்டாக தட்டிய கறிவேப்பிலையைச் சேர்க்கவும். கறிவேப்பிலையின் சத்துக்கள் முழுமையாக இறங்கி எண்ணெயின் நிறம் மாறியதும் வடிகட்டி தனியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்தும் முறை:
இந்த எண்ணையை தொடர்ந்து தலையில் அப்ளை செய்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பின் ஹெர்பல் ஷாம்பு கொண்டு குளித்து வர நரைமுடி நாளடைவில் நிரந்தரமாக கருப்பாக மாறும். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.
நன்மைகள்:
கறிவேப்பிலையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் மற்றும் அமினோ அமிலங்கள் முடியின் வேர்க்கால்களுக்குள் ஆழம் சென்று நரைமுடியைக் கருமையாக்கும். முடி அடர்த்தியாக வளரவும் உதவும்.
3. மருதாணி - அவுரி நேச்சுரல் ஹேர் டை
தேவையான பொருட்கள்:
- மருதாணி பொடி - 4 தேக்கரண்டி
- அவுரி பொடி - 4 தேக்கரண்டி
- நெல்லிக்காய் பொடி - 2 தேக்கரண்டி
- காபி தூள் - 1 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
பயன்படுத்தும் முறை:
முதல் நாள் இரவே மருதாணி பொடி, காபி பொடி, நெல்லிக்காய் பொடியுடன் வெந்நீர் சேர்த்து ஸ்மூத்தான பேஸ்ட்டாக கலந்து இரவு முழுவதும் ஊறவிடவும். காலையில் இந்த பேஸ்ட்டை தலையில் தடவி இரண்டு மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு கொண்டு அலசவும். இதனால் முடி சிவப்பாக மாறும்.
பின்னர், அவுரி பொடியை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி, அதை தலையில் அப்ளை செய்து 2 மணி நேரம் கழித்து அலசினால் முடி கருப்பாக மாறும். மாதத்திற்கு ஒருமுறையாவது இதை பயன்படுத்தி வந்தால் இயற்கையாகவே நாளடைவில் உங்களுடைய முடி கருப்பாக மாறிவிடும்.
நன்மைகள்:
மருதாணி, அவுரி இரண்டும் முடியின் வேர்க்கால்களை பலப்படுத்தும். ரசாயன டைகளை போலல்லாமல், இயற்கையாகவே முடியின் உட்புறத்தில் இருந்து அதன் நிறத்தை மாற்ற உதவும்.
4. கருப்பு எள் - பாதாம் பேஸ்ட்
தேவையான பொருட்கள்:
- கருப்பு எள் - 1 டீஸ்பூன்
- பாதாம் பருப்பு - 5
- தேன் - 1 டீஸ்பூன்
பயன்படுத்தும் முறை:
எள் மற்றும் பாதாம் இரண்டையும் இரவு முழுவதும் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் ஊறவைத்த தண்ணீரையே ஊற்றி மிக்ஸியில் பேஸ்டாக அரைக்கவும். இந்த கலவையை தேனுடன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, முடி கருகருவென்று வளரும்.
நன்மைகள்:
கருப்பு எள்ளில் இரும்புச்சத்தும் தாதுக்களும் அதிகமாக இருக்கின்றன. இவை மெலனின் உற்பத்தியை முடியில் அதிகரிக்கச் செய்யும். பாதாம் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தைத் தூண்டி முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.