சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் இரவு நடை அடைக்கும் போது பாடப்படும் 'ஹரிவராசனம்' பாடல், பலரும் நினைப்பது போல தாலாட்டு பாடல் அல்ல. இறைவனின் யோக நிலையை போற்றும் ஆழ்ந்த பக்தி கீதம் இது. இந்த அற்புதமான பாடலின் ஒவ்வொரு வரியின் பொருளையும் ஆழமாக அறிவதன் மூலம், அதன் உண்மையான ஆன்மீக மகத்துவத்தையும், ஐயப்பனை சரணடையும் பக்தியின் உச்சத்தையும் நாம் உணர முடியும். தமிழ் ஆன்மீகத்தில் இத்தகைய பக்தி பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, குறிப்பாக முருகன் ஆலயங்கள் மற்றும் பிற புனித ஸ்தலங்களில் பாடப்படும் கீதங்கள் மனதிற்கு அமைதியைத் தருகின்றன. ஜோதிடம்360 உங்களுக்காக ஹரிவராசனம் பாடலின் முழுமையான தமிழ் பொருளை வழங்குகிறது.
ஹரிவராசனம்: ஐயப்பனின் யோக நிலை குறித்த பாடல்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இரவு நடை அடைக்கப்படும் போது ஹரிவராசனம் பாடப்படும். இது சுவாமி ஐயப்பனை தூங்க வைப்பதற்கான தாலாட்டு பாடல் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இறைவன் எப்போதும் தூங்குவது கிடையாது. ஆழ்ந்த யோக நிலைக்கு மீண்டும் திரும்புவதாக ஐதீகம். அதற்காகத்தான் இந்த பாடல் பாடப்படுகிறது. வருடத்தின் அனைத்து நாட்களும் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்திருக்கும் சுவாமி ஐயப்பன், மண்டல-மகரவிளக்கு பூஜையின் போது யோக நிலையில் இருந்து விடுபட்டு, பக்தர்களை கண் திறந்து பார்ப்பதாக ஐதீகம். தினமும் காலையில் யோக நிலையில் இருந்து விடுபட்டு, பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய பிறகு, இரவு மீண்டும் யோக நிலைக்கு திரும்பும் பாரம்பரிய நிகழ்வின் போதுதான் ஹரிவராசனம் பாடப்படுகிறது.
ஹரிவராசனம் பாடலின் ராகம், இசை ஆகியவை மென்மையாக இருப்பதால் அது தாலாட்டு பாடல் என சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் சுவாமி ஐயப்பன் மீது கொண்ட தூய்மையான, ஆழ்ந்த பக்தியின் உச்சமாக பாடப்படுவதே இந்த ஹரிவராசனம். இந்த பாடலின் தமிழ் அர்த்தம் தெரிந்தால், இது தாலாட்டு பாடல் கிடையாது என்பதும், சுவாமி ஐயப்பன் மீது கொண்ட பக்தியை வெளிப்படுத்தி, ஐயப்பனை சரணடைவதற்கான பாடல் என்பது புரியும். ஹரிவராசனம் பாடலின் தமிழ் அர்த்தத்தை தெரிந்து கொள்வோம்.
ஹரிவராசனம் பாடலின் தமிழ் அர்த்தம்:
1. ஹரிவராஸனம் விச்வமோஹனம்...
பொருள்: ச்ரேஷ்டமான அரியாசனத்தில் இருப்பவரும், விஸ்வத்தை மோஹிக்கச் செய்பவரும், கதிரவனால் ஆராத்திக்கப்படும் சரணங்கள் உடையவரும், சத்ருக்களை அழிப்பவரும், நாள்தோறும் ஆனந்த நர்த்தனம் செய்பவரும் ஆகிய ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
2. சரண கீர்த்தனம் சத்தமானஸம்...
பொருள்: சரண கோஷத்தை கேட்கும் மனமும், லோகத்தை பாதுகாத்து நர்த்தன மிடுபவரும், காலை சூரியனின் சிவந்த ஒளியான காந்தி உடையவரும் பூத நாயகனுமாகிய ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
3. ப்ரணய ஸத்யகம் ப்ராண நாயகம்...
பொருள்: ப்ரியமான ஸத்யகாவின் ப்ராண நாயகரும், சக்தி, திறமை உள்ளவரும். வணங்கி வரும் பக்தர்களுக்கு அருளை பேதமில்லாமல் கொடுப்பவரும், ஓம்காரத்தின் வாஸஸ்தலமும், இசையில் பிரியமும் உள்ளவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
4. துரக வாஹனம் சுந்தரானனம்...
பொருள்: குதிரை வாஹனரும், அழகிய தோற்ற முடையவரும், சிறந்த கதாயுதம் ஏந்தியவரும், தேவர்களால் போற்றப்படுபவரும், கருவை போல அருள் செய்பவரும், இசையில் ப்ரியம் உடையவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
5. த்ரிபுவனார்ச்சிதம் தேவாத்மாகம்...
பொருள்: மூன்று உலகத்தில் உள்ளவர்களால் அர்ச்சிக்கப்படுபவரும், சகல தேவ ஸ்வரூபமாகவரும், மூன்று கண்களுடையவரும், ப்ரபுவானவரும், சிறந்த குருவாகவும், முப்பத்து முக்கோடி தேவதைகளால் பூஜிக்கப்படுபவரும், நினைத்ததை உடனே அருள்பவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
6. பவபயாபஹம் பாவுகாவகம்...
பொருள்: பவஸாகரத்தைப் பற்றிய பயத்தை நாசம் செய்பவரும், பக்தர்களுக்கு மங்கலம் அளிப்பதில் பிதாவை போன்றவரும், உலகத்தை தன்பால் மோஹிக்கச் செய்பவரும், விபூதி அணிந்தவரும், திவ்யமான வெள்ளை யானையை வாஹனமாக உடையவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
7. களம்ருதுஸ்மிதம் ஸுந்தரானனம்...
பொருள்: மதுரமான, ம்ருதுவான மந்தஹாஸம் உடையவரும், சுந்தர முகமுடையவரும், இளமையும், மென்மையும் உடையவரும், மயங்கவைக்கும் தேஹ முறையவரும், யானை, சிங்கம், குதிரை ஆகிய வாஹனங்கள் உடையவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன்.
8. ச்ரித ஜனppிரியம் சிந்திதப்ரதம்...
பொருள்: தஞ்சமடைந்த மக்கள் மீது ப்ரியம் உடையவரும், நினைத்ததை உடனேயே அளிப்பரும், வேதங்களை ஆபரணமாக அணிந்தவரும், பரமாத்மாவாகவும், வேதங்களால் மனோஹரமானவராக வர்ணிக்கப்படுபவரும், கீதத்தில் பிரியமுள்ளவருமான ஹரிஹர புத்ர தேவனைச் சரண் அடைகிறேன். புராணங்களில் வேதங்கள் ஐயப்பனின் காற் சிலம்புகளாகவும், சிலம்பொலி வேத கோஷமாகவும் கூறப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
- ஹரிவராசனம் ஒரு தாலாட்டு பாடல் அல்ல; ஐயப்பனை சரணடையும் பக்தி கீதம்.
- இறைவன் யோக நிலைக்கு திரும்புவதைக் குறிக்கிறது.
- பாடலின் மென்மை தவறாக தாலாட்டாக கருதப்பட்டது.
- இந்த பாடல் ஐயப்பன் மீதான தூய்மையான பக்தியின் வெளிப்பாடு.
- ஒவ்வொரு ஸ்லோகமும் ஐயப்பனின் குணங்களையும் மகிமைகளையும் போற்றுகிறது.