ஆண்களுக்கு ஏற்படும் கருவுறாமைப் பிரச்சினைகளுக்கு, விந்தணுக்களின் எண்ணிக்கைக் குறைபாடு, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் விந்துக்களின் தரத்தில் ஏற்படும் பிரச்சனைகள் முக்கிய காரணங்களாக அமைகின்றன. நவீன வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இவற்றை இயற்கையாகவே சரிசெய்யும் வழிமுறைகள் தேவையாய் இருக்கின்றன. இங்கு, கருவளத்தை மேம்படுத்த உதவும் சில எளிய மற்றும் பயனுள்ள தீர்வு முறைகள் மற்றும் ஒரு சிறப்பு தேநீர் செய்முறையைப் பார்க்கலாம்.
கருவுறுதல் பிரச்சனைகளுக்கான காரணங்கள்
கருவளம் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அடிப்படையான காரணமே வாழ்க்கை முறைதான். உங்கள் வாழ்க்கை முறைதான் நீண்ட கால கருவளத்தைத் தீர்மானிக்கும். மன அழுத்தம் மிக முக்கியக் காரணம். தீவிர மன அழுத்தம் ஏற்படும்போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும். இதனால் ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதோடு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனின் உற்பத்தியிலும் குறைபாடுகள் ஏற்படலாம்.
கருவளம் பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கருவுறுதல் பாதிக்கப்படுகிறது என்றால், முதலில் மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொள்ள வேண்டும். உடல் நலன் சார்ந்த இப்பிரச்சினையை உணர்வு ரீதியாகக் கையாளாமல், மற்ற உடல்நலப் பிரச்சனைகளைப் போல இதுவும் ஒன்று எனப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பின்வரும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் பின்பற்றலாம்:
- உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது.
- மது மற்றும் புகைப்பழக்கத்தை முழுமையாக கைவிடுவது.
- சர்க்கரை மற்றும் கார்பனேட்டட் பானங்களைத் தவிர்ப்பது.
- பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஜங்க் உணவுகளைத் தவிர்த்தல்.
- மன அழுத்தம் இல்லாமல் இருப்பது, யோகா மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்வது.
கருவளம் மேம்பட எள்ளுத் தேநீர்: தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி, விந்தணுக்களின் உற்பத்திக்கு உதவும் சிறப்பு எள்ளுத் தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பாரம்பரிய தமிழ் வைத்திய முறையாகும்.
தேவையான பொருட்கள்:
- கருப்பு எள் - 2 ஸ்பூன்
- இஞ்சி - 1 இன்ச் (தோல் சீவியது)
- மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்
- மிளகு பொடி - கால் ஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- தேன் - அரை ஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் கருப்பு எள்ளை சேர்க்கவும்.
- தோல் சீவிய இஞ்சியைத் தட்டி அதனுடன் சேர்க்கவும்.
- மஞ்சள் பொடியையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்து வரும்போது, கால் ஸ்பூன் மிளகுப் பொடியைச் சேர்க்கவும்.
- மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொதிக்க விட்டு, பின்னர் வடிகட்டினால் கருவளத்தை மேம்படுத்தும் தேநீர் தயார்.
தொடர்ந்து இந்த பானத்தைக் குடித்து வரும்போது கருவளம் மேம்படும், மேலும் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
இந்த பானம் குடிப்பதன் நன்மைகள்
- கருப்பு எள்: வைட்டமின் ஈ, கால்சியம், ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இவை விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.
- இஞ்சி: விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தி, ஹார்மோன்களின் சமநிலைக்கு உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- மஞ்சள்: இதில் உள்ள குர்குமின் உடலில் ஏற்படும் இன்ஃபிளமேஷன்களைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இந்த ஒட்டுமொத்த பானமும் இணைந்து மலட்டுத்தன்மையை சரிசெய்யவும், ஆண்களின் கருவுறுதலை மேம்படுத்தவும் உதவும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இது எந்தவித மருந்து மற்றும் மருத்துவ சிகிச்சைக்கு இணையானது அல்ல. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு Jothidam360 பொறுப்பாகாது. மருத்துவ ஆலோசனைக்கு நிபுணர்களை அணுகவும்.