திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இரண்டும் இணைந்து வரும் நாள் சிவ வழிபாட்டிற்கு மிகவும் உகந்ததாகும். இந்த சிறப்புமிக்க நாளில் சிவனை வழிபடுவதால் வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கி, விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். ஜோதிட ரீதியாகவும் மிகுந்த பலன் தரக்கூடிய இந்த நாளின் முக்கியத்துவம், வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் வரலாறு பற்றி இங்கு விரிவாக காணலாம்.
பிரதோஷமும் மாத சிவராத்திரியும்: அரிய சங்கமம்
மாதந்தோறும் வரும் திரியோதசியை பிரதோஷம் என்றும், சதுர்த்தசியை மாத சிவராத்திரி என்றும் தமிழ் மக்கள் கொண்டாடுகிறோம். இவை இரண்டுமே சிவ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்ற நாட்களாகும். சில மாதங்களில் திரியோதசி, சதுர்த்தசி ஆகிய இரண்டு திதிகளும் ஒரே நாளில் இணைந்து வருவதுண்டு. இப்படி பிரதோஷமும், மாத சிவராத்திரியும் இணைந்து வரும் நாள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த அற்புதமான நாளில் சிவ பெருமானை குறிப்பிட்ட முறையில் வழிபட்டால் அவரது பரிபூரண அருளை பெற முடியும். அதோடு வாழ்வில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இரண்டும் ஒரே நாளில் இணைந்து ஜூன் 23ம் தேதியான இன்று அமைந்துள்ளது. அதுவும் இவை இரண்டும் இணைந்து திங்கட்கிழமையில் வருவது இன்னும் கூடுதல் சிறப்பானதாகும். சோமவார பிரதோஷம் எனப்படுவது சிவ வழிபாட்டில் மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும். பிரதோஷ விரதம், மாத சிவராத்திரி விரதம் இரண்டுமே சிறப்புக்குரியதாகும். இவை இரண்டும் ஒரே நாளில் வருவதால் இரு மடங்கு பலன் தரக் கூடிய சிறப்பான நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் தடைகளில் இருந்து விடுபட முடியும். பிறப்பு-இறப்பு சுழற்சியில் இருந்தும் விடுபட முடியும்.
பிரதோஷ வரலாறு: ஆலகால விஷம்
கந்த புராணத்தின் படி, தேவர்களும், அசுரர்களும் அமிர்தத்தை பெறுவதற்காக பாற்கடலை கடைந்த போது, முதலில் வெளிப்பட்டது ஆல காலம் எனப்படும் மிக கொடிய விஷம். இது பாற்கடலில் இருந்து வெளிப்பட்டு அனைவரையும் துரத்தத் துவங்கியது. அனைவரும் இதைக் கண்டு நடுங்கிய போது, உலக உயிர்களை காப்பதற்காக சிவ பெருமான் அந்த ஆலகால விஷயத்தின் கடைசி துளி வரை பருகினார். அப்படி ஆலகால விஷத்தை உண்டு, நந்தியின் கொம்புகளுக்கு இடையே நர்த்தனம் ஆடிய மாலை வேளை, பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. இது சிவபெருமானின் கருணைக்கு ஒரு சிறந்த சான்றாகும்.
சிவராத்திரி வழிபாடு மற்றும் முக்கியத்துவம்
சிவ-சக்தி ஐக்கியத்தின் அடையாளமாக போற்றப்படும் நாள் சிவராத்திரியாகும். தேய்பிறையில் வரும் சதுர்த்தசி நாளை மாத சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இதுவே உலக உயிர்கள் தோன்றிய தினமாக கருதப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, தெய்வ அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாக குறிப்பிடப்படுகிறது. பிரதோஷம் மற்றும் மாத சிவராத்திரி இரண்டும் சிவனை வழிபட்டு, சிவனின் அருளை பெறுவதற்குரிய நாளாகும். இது திங்கட்கிழமையில் வரும் பிரதோஷம் என்பதால் சோமவார பிரதோஷம் என்கிறோம். இந்த நாளில் சிவன், சிவ வடிவங்களில் ஒன்றான தட்சிணாமூர்த்தி மற்றும் மங்கள கிரகமான குரு பகவான் ஆகியோரை வழிபடுவது மிகவும் ஏற்றது.
பிரதோஷத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
- ✔ அபிஷேகம்: இந்த நாளில் சிவலிங்கத்திற்கு சுத்த நீரால் அபிஷேகம் செய்வதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- ✔ ஜபம் மற்றும் தியானம்: சிவ புராணம் படிப்பது, சிவனுக்குரிய மந்திரங்கள் ஜபம் செய்வதும், சிவனை நினைத்து தியானம் செய்வதும் மிக சிறப்பானதாகும்.
- ✔ ஆலய சேவை: பூஜை ஏதும் நடத்துவதற்கு கூட வழி இல்லாமல் இருக்கும் சிவாலயங்களில் சென்று சுத்தம் செய்து, விளக்கேற்றி, அங்குள்ள சிவ லிங்கத்திற்கு வெறும் தண்ணீரால் அபிஷேகம் செய்தால் கூட சிவனின் அளவில்லாத அருளையும் அளவில்லாத நன்மைகளையும் பெற முடியும். இது சிவ வழிபாடுகளிலேயே மிகவும் உயர்ந்த உன்னத வழிபாடாக கருதப்படுகிறது.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
திங்கட்கிழமையில் வரும் பிரதோஷ தினத்தை சோமவார பிரதோஷம் என்போம். இந்த நாளில் சிவ வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு. இது ஜோதிட ரீதியாகவும் சிறப்பான பலன்களை தரவல்லது.
பிரதோஷம் அன்று சிவ வழிபாடு செய்து, விரதம் இருந்து, மாலையில் நடக்கும் சிவ பூஜையில் கலந்து கொள்வது நன்மையை தரும். சிவலிங்கத்திற்கு சுத்த நீரால் அபிஷேகம் செய்து, சிவ புராணம் படிப்பது, சிவனுக்குரிய மந்திரங்கள் ஜபம் செய்வது, தியானம் செய்வது சிறந்தது.
கந்த புராணத்தின் படி, பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் அருந்திய மாலை வேளையே பிரதோஷ நேரமாக கருதப்படுகிறது. உலக உயிர்களை காக்க சிவன் செய்த தியாகத்தின் அடையாளம் இது.