அஷ்டமி திதி என்பது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். உக்கிரமான காவல் தெய்வங்களில் முதன்மையானவரான பைரவரை வளர்பிறை அஷ்டமி திதியில் வழிபடுவதன் மூலம் செல்வ வளத்தை பெற்று, பணத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யலாம். குறிப்பாக, சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டு அஷ்டலட்சுமிகளின் அருளையும் பெற்று, தங்கமும், பணமும் பெருகும் அற்புதமான வழிமுறைகளை இங்கே காணலாம். இந்த வழிபாடு ஜோதிட ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகச் சிறந்த பலன்களை அளிக்கும்.
பைரவர் வழிபாடு - முக்கியத்துவம்
அஷ்டமி திதி என்றாலே அது பைரவருக்கு உரிய திதியாகும். சிவ பெருமானின் 64 ரூபங்களில் பைரவரும் ஒருவர். இவர் சிவன் கோவில்களை மட்டுமின்றி, தன்னை பக்தியுடனும், நம்பிக்கையுடனும் வழிபடும் பக்தர்களை எட்டு திசைகளிலும் ஆபத்துக்கள் ஏதும் நெருங்காமல் இருந்து பாதுகாத்து அருள்பாலிக்கிறார். பொதுவாகவே பைரவரை வழிபடுவதற்கு அஷ்டமி திதி, ராகு காலம், ஞாயிற்றுக்கிழமை ஆகியவை மிகவும் உகந்தவை. இவற்றில் எந்த நாளில் முடிகிறதோ அந்த நாளில் பைரவரை வழிபடலாம். பைரவர் பல வடிவங்களில் அருள்பாலிக்கிறார். இந்த ஒவ்வொரு வடிவத்தையும் வணங்குவதால் ஒவ்வொரு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. இதில் செல்வ வளத்தை தந்து, பணத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக் கூடியவர் சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார். இவரை வழிபட்டு, இவரது அருளால் தான் அஷ்டலட்சுமிகளும் அளவில்லாத செல்வங்களை பெறுவதாக சொல்லப்படுகிறது.
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டு முறை
வளர்பிறை அஷ்டமி நாளில் சொர்ண ஆகர்ஷண பைரவரை மிக எளிமையான முறையில் வழிபட்டாலே இவரது அருள் முழுவதுமாக கிடைக்கும். இந்த வழிபாடு பணமும், தங்கமும் சேர உதவும். இந்த வழிபாட்டிற்கான எளிய வழிமுறைகள்:
- நாள் மற்றும் நேரம்: ஆனி மாத வளர்பிறை அஷ்டமி ஜூலை 03ம் தேதி அன்று அமைந்துள்ளது. ஜூலை 02ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கி, ஜூலை 03ம் தேதி மாலை 04.22 வரை அஷ்டமி திதி உள்ளது. வியாழக்கிழமையான இன்று பகல் 01.30 மணி முதல் பகல் 3 வரை ராகு காலமும் உள்ளது. இன்று முடிந்தவர்கள் ராகு காலத்திலோ அல்லது மாலை 04.20 மணிக்கு முன்பாகவோ பைரவரை எளிமையான சில முறைகளில் வழிபட்டால் பைரவரின் அருளும், அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்கும்.
- வீட்டில் வழிபாடு: வீட்டின் பூஜை அறையில் சொர்ண ஆகர்ஷண பைரவரின் படம் இருந்தால் அதற்கு முன்பாகவோ அல்லது சிவ பெருமானின் படத்திற்கு முன்பாகவோ ஒரு தட்டில் ஐந்து அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றுங்கள்.
- நிவேதனம்: பைரவருக்கு விருப்பமான வாசனை மலர்களை சூட்டி, ஏதாவது ஒரு இனிப்பு வகை அல்லது தயிர் சாதம் நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள்.
- மந்திர ஜபம்: பிறகு சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு உரிய மந்திரமான, "ஓம் ஸ்ரீம் க்லீம் சொர்ண ஆகர்ஷண பைரவாய நமோ நமஹ" என்ற மந்திரத்தை 11 முறை முழு மனதுடனும், பக்தியுடனும் சொல்லி வழிபடுங்கள்.
- தீபாராதனை: 11 முறை இந்த மந்திரத்தை சொல்லிய பிறகு தீபாராதனை காட்டி, பைரவரை வழிபடுங்கள்.
- தொடர்ச்சியான வழிபாடு: இந்த வழிபாட்டினை ஒவ்வொரு வளர்பிறை அஷ்டமி திதி வரும் நாளிலும் செய்வது சிறப்பு.
இந்த வழிபாட்டினை வீட்டில் செய்ய முடியாதவர்கள், அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று, அங்குள்ள பைரவர் சன்னதியில் செய்யலாம். சிவன் கோவிலில் உள்ள பைரவர் சன்னதியில் விளக்கேற்றி, நம்முடைய குறைகளை சொல்லி முறையிடுவதால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். இது ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தில் கடன் நிவர்த்திக்கு சிறந்த வழியாகும்.
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டின் பலன்கள்
- சொர்ண ஆகர்ஷண பைரவரின் அருளால் நம்முடைய பணத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகும்.
- தங்கமும், பணமும் நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கும்.
- கடன், பண தட்டுப்பாடு தீரும்.
- அடமானமாக வைத்த தங்கம் விரைவில் வீடு வந்து சேரும்.
- ஜோதிட ரீதியாக ஏற்படும் பணப்பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.