ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட மிக உகந்த நாள். இந்த நாளில் முன்னோர்களை மகிழ்விக்கும் வழிபாட்டு முறைகள், விரத நியதிகள் மற்றும் முக்கிய விதிகள் பற்றி ஜோதிட ரீதியாகவும் அறியலாம்.
ஆடி அமாவாசை தர்ப்பணம்: எள்ளும் தண்ணீரும்
ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்வது மிகவும் முக்கியம். இதை நீர்நிலைகளின் அருகில் செய்வது சிறந்தது. புரோகிதர் உதவியுடன் முறைப்படி தர்ப்பணம் செய்யலாம். அது இயலாதவர்கள் வீட்டிலேயே எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபடலாம். இது முன்னோர்களின் ஆசியைப் பெற்றுத் தரும்.
பூஜை அறையில் விளக்கேற்றுவதுடன், முன்னோர்களின் படத்திற்கு முன்பு தனியாக நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். இது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய உதவும்.
முன்னோர்களுக்கு படையல் இடும் முறை
மறைந்த முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படையல் இட வேண்டும். குறிப்பாக வாழைக்காய், புடலங்காய், வாழைத்தண்டு, பசும்பால், தயிர் போன்றவற்றைச் சேர்ப்பது வழக்கம்.
காகத்திற்கு சாதம் வைத்தல்:
படையலிட்ட பிறகு காகத்திற்கு சாதம் வைப்பது மிகவும் முக்கியம். காகத்தை எமனின் தூதனாக கருதுவதால், காகம் சாதம் உண்டால் முன்னோர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது ஐதீகம். இது பித்ருக்களை மகிழ்விக்கும் ஒரு முக்கிய சடங்காகும்.
அசைவ உணவுகள் படையல்?
அமாவாசை என்பது மிக முக்கியமான விரத நாள் என்பதால் அன்றைய தினம் அசைவம் செய்து படைக்கலாமா, கூடாதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. சாஸ்திரங்களின் படி, அமாவாசை நாளில் அசைவம் சமைக்கவோ, சாப்பிடவோ கூடாது என சொல்லப்படுகிறது.
நம்முடைய முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும் என்பதால், சைவத்தில் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து படையல் போடலாமே தவிர, அசைவம் சமைத்து படைக்கக் கூடாது. இது முன்னோர்களை அவமதிப்பதற்கு சமமானதாகும். இதனால் அவர்கள் கோபமும், வருத்தமும் அடைவார்கள்.
அதே சமயம், ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு பிடித்தமான அசைவ உணவுகளை படைத்து வழிபட வேண்டும் என்றால் அசைவம் சமைத்து முன்னோர்களுக்கு படைக்கலாமே தவிர, காகத்திற்கு வைக்கும் போதோ அல்லது வீட்டில் உள்ளவர்களோ அந்த அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது. சைவ உணவுகளை மட்டுமே இந்த நாளில் உண்ண வேண்டும் என சொல்லப்படுகிறது.
ஆடி அமாவாசை விரத நியதிகள் - பெண்களுக்கான விதிகள்
முன்னோர்களை நினைத்து உபவாசம் இருப்பது (விரதம்) சிறந்தது. ஆண்கள், குறிப்பாக தாய்-தந்தை இல்லாதவர்கள், கண்டிப்பாக இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
- சுமங்கலிப் பெண்கள் அமாவாசை விரதம் இருக்க வேண்டியதில்லை.
- கணவரை இழந்த பெண்கள் மட்டுமே இந்த நாளில் பட்டினியாக விரதம் இருக்கலாம்.
- சுமங்கலி பெண்கள், மறைந்த தங்களின் தாய், தந்தைக்காக பட்டினியாக விரதம் இருக்கவோ, எள்ளும் தண்ணீரும் இறைக்கவோ கூடாது.
மாதந்தோறும் வரும் அமாவாசைகளில் விரதம் இருந்து வழிபட்டாலும், ஆடி, தை, மகாளய அமாவாசைகளில் விரதம் இருந்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இந்த நாளில் செய்யும் பித்ரு வழிபாடு மிகச் சிறப்பானது. இந்த நாளில் முன்னோர்களின் ஆசியைப் பெறவும், பித்ரு தோஷங்களில் இருந்து விடுபடவும் சில முக்கிய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஜோதிட ரீதியாக ஆடி அமாவாசை முக்கியத்துவம்
ஜோதிடத்தில், பித்ரு தோஷம் என்பது மிகவும் முக்கியமானது. சரியாக முன்னோர் வழிபாடு செய்யாதவர்களுக்கு இந்த தோஷம் ஏற்படலாம். ஆடி அமாவாசை அன்று செய்யப்படும் தர்ப்பணம் மற்றும் படையல் மூலம், முன்னோர்களின் ஆசிகளைப் பெற்று, ஜோதிட ரீதியான பித்ரு தோஷ நிவர்த்தி பெறலாம். இது குடும்பத்தில் அமைதியையும், சந்ததியினரின் நலனையும் மேம்படுத்தும்.