நவராத்திரி நாட்களில் அம்பிகையின் அருளைப் பெற அகண்ட தீப வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த வழிகாட்டி அகண்ட தீப வழிபாட்டின் முக்கியத்துவம், அதன் முறைகள் மற்றும் பலன்களை விவரிக்கிறது.
அகண்ட தீப வழிபாடு என்றால் என்ன?
நவராத்திரி வழிபாட்டின் முக்கிய அம்சமாக கொலு படிகள் வைத்தும், கலசம் அமைத்தும் வழிபடுவது உண்டு. ஆனால், கொலு மற்றும் கலசம் வைத்து வழிபட முடியாதவர்கள், அன்னை பராசக்தியை வீட்டில் எழுந்தருளச் செய்வதற்காக செய்வது தான் அகண்ட தீப வழிபாடு. விளக்கேற்றி வழிபடுவதில் இது மிகவும் உயர்ந்த வழிபாடாக கருதப்படுகிறது.
ஒரு பெரிய மண் அகல் விளக்கில் முழுவதும் எண்ணெய் நிரப்பி, அந்த தீபத்தில் அம்பிகையை எழுந்தருளச் செய்து வழிபடுவது அகண்ட தீப வழிபாடாகும். இந்த அகண்ட தீபமானது நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்க வேண்டும். கலசம் வைத்து வழிபடுவதை போல் தினமும் ஏதாவது நைவேத்தியம் படைத்து, காலை மற்றும் மாலை பூஜை செய்வது சிறப்பு.
அகண்ட தீபத்தின் சிறப்பு மற்றும் பலன்கள்
அகண்ட தீபம் என்பது பக்தி, செல்வ வளம் மற்றும் தீய சக்திகளை விரட்டுவதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடாகும். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அகண்ட தீபம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருப்பதால், அது நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் மற்றும் இறையருள் ஆகியவற்றை ஈர்க்கும் என்பது நம்பிக்கை.
அகண்ட ஜோதி ஆழமான நம்பிக்கை மற்றும் தெய்வீக சக்தியை குறிப்பதாகும். கலசம் வைத்தாலும், வைக்கா விட்டாலும் வீட்டில் அகண்ட தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பானது. அன்னை பராசக்திக்கு விருப்பமான ஒன்று தீப சுடர். இதில் அம்பிகை வீற்றிருந்து அருளை வழங்குவாள். இந்து சமயத்தில் விளக்கு ஏற்றி வழிபடுவது மங்களகரமானதாகவும், தெய்வீகமானதாகவும் கருதப்படுவதால் அகண்ட தீப வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
முக்கிய பலன்கள்:
- பக்தி மற்றும் தெய்வீக ஆற்றலை பெருக்கும்.
- செல்வ வளம், மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை ஈர்க்கும்.
- தீய சக்திகளை அகற்றி, நேர்மறை அதிர்வுகளை உருவாக்கும்.
- அன்னை அம்பிகையின் முழுமையான அருளைப் பெற்றுத்தரும்.
அகண்ட தீபம் ஏற்றுவதற்கான விதிகள்
- 1 பூஜை அறையின் கிழக்கு அல்லது வட கிழக்கு திசையிலேயே அகண்ட தீபத்தை ஏற்ற வேண்டும். இவை நேர்மறை ஆற்றல்கள், ஞானம் ஆகியவற்றை குறிக்கும் திசைகளாகும்.
- 2 தெற்கு நோக்கி ஒரு போதும் இந்த தீபத்தை ஏற்றக் கூடாது. இது அபசகுனமாக கருதப்படுகிறது.
- 3 அகண்ட தீபத்திற்கு நெய் விட்டு ஏற்றுவது மிகவும் சிறப்பு. அப்படி முடியா விட்டால் நல்லெண்ணெய் பயன்படுத்தலாம்.
- 4 அரிசி, கோதுமை அல்லது நெல் வைத்து அதன் மீது அகண்ட தீபத்தை ஏற்றுவது சிறப்பு.
- 5 அகண்ட தீபத்தை எப்போதும் பாதுகாப்பாக கண்ணாடி அல்லது ஏதாவது தடுப்பு வைத்தே ஏற்ற வேண்டும்.
- 6 நவராத்திரியின் முதல் நாளில் கலசம் அமைப்பதற்கான நேரத்தில், பஞ்சுத்திரி அல்லது சிவப்பு நூல் திரி இட்டு அகண்ட தீபத்தை ஏற்ற வேண்டும்.
- 7 குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர் அகண்ட தீபத்திற்கு பொறுப்பேற்று ஒன்பது நாட்களும் அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- 8 குளித்த பிறகு தான் அகண்ட தீபத்தை தொட வேண்டும். அகண்ட தீபத்தை சுற்றி உள்ள பகுதிகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
- 9 நவராத்திரியின் நிறைவு நாளிலும் தீபம் தானாக குளிரும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். வாயால் ஊதியோ அல்லது வேறு வழிகளிலோ குளிர அணைக்கக் கூடாது.
அகண்ட தீபம் அணைந்து விட்டால் என்ன செய்வது?
தெரியாமலோ, காற்று அடித்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ அகண்ட தீபம் அணைந்து விட்டால், அதை அபசகுனமாக நினைத்து வருத்தப்பட வேண்டிய அவசியம் கிடையாது. அன்னை அம்பிகையிடம் மனதார மன்னிப்பு கேட்டு விட்டு, மீண்டும் அந்த தீபத்தை ஏற்றி வைத்து வழிபடலாம். அதற்குப் பிறகு நவராத்திரி முடியும் வரை அந்த தீபம் எரியும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
நவராத்திரியின் ஒன்பத நாட்களும் இந்த தீபத்திற்கு தீபாராதனை காட்டி, முறையாக வழிபட வேண்டும். இதனால் கலசம் வைத்து வழிபட்டதற்கு இணையான பலன்களைப் பெற முடியும்.