அசுவினி நட்சத்திர குணநலன்கள் மற்றும் ஜோதிட பலன்கள்
அசுவினி (Ashvini) நட்சத்திரத்தின் பொதுவான குணநலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களுக்கு எத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறதோ, அதைவிட அதிக முக்கியத்துவம் நட்சத்திரங்களுக்கு தரப்பட்டிருக்கின்றன. ஒருவர் பிறந்திருக்கும் நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அவருடைய ஜாதகம் எழுதப்படுகிறது.
அசுவினி நட்சத்திரத்தின் அதிபதி கேது. இது மேஷ ராசியில் இடம்பெற்றிருக்கிறது, இதன் ராசி அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மன உறுதி மற்றும் உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்களாகவும், சுயகௌரவத்தை எந்தக் காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்காதவர்களாகவும் இருப்பார்கள்.
எதிலும் முதலிடத்தில் இருக்க விரும்புவார்கள். கண்களில் எப்போதும் ஒரு பிரகாசம் இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்த்தே ஏற்றுக்கொள்வார்கள். நண்பர்கள் நிறைய இருந்தாலும், சிலருடன் மட்டுமே நெருங்கிப் பழகுவார்கள். பிற மொழிகளில் தேர்ச்சி பெறுவார்கள். நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பார்கள்.
பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து வளர்ப்பார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவார்கள். தீர்க்காயுளுடன் இருப்பார்கள். செவ்வாய் சாதகமாக இருந்தால், போலீஸ், ராணுவம், அல்லது மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.
அசுவினி (Ashvini) நட்சத்திர பாதவாரியான பலன்கள்
அசுவினி 1-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - செவ்வாய்.
அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் உண்மையிலிருந்து தவற மாட்டார்கள். சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள். ஆடம்பரச் செலவுகள் செய்தாலும், நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டார்கள். சிறு வயதில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் காட்டுவார்கள். நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.
அசுவினி 2-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்.
இந்தப் பாதத்தில் பிறந்தவர்கள் கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். மற்றவர்களைக் கவரும் தோற்றத்துடன் காணப்படுவார்கள். உயர் கல்வி யோகம் உண்டு. சிறு வயதிலேயே சொந்த வீடு, வாகன வசதிகள் அமையும். காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருப்பார்கள்.
அசுவினி 3-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - புதன்.
அன்புக்குக் கட்டுப்படும் இவர்கள் அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டார்கள். நாசூக்காகப் பேசி காரியம் சாதிப்பார்கள். கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வம் இருக்கும். அறிவுபூர்வமாக வாதம் செய்வதில் வல்லவர்கள். திருமணம் தாமதமாகலாம். எளிமையாக இருப்பதையே விரும்புவார்கள்.
அசுவினி 4-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சந்திரன்.
தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருப்பார்கள். பரபரப்பாக காணப்படுவார்கள். நவீன ரக ஆடை, ஆபரணங்களை அணிவதில் ஆர்வம் காட்டுவார்கள். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதில் கவனமாக இருப்பார்கள். அழகிய தேக அமைப்பு பெற்றிருப்பார்கள். தெய்வ பக்தி அதிகமிருக்கும். ஏழை எளியவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.
வழிபட வேண்டிய தெய்வங்கள் மற்றும் அதிர்ஷ்ட ரத்தினம்
வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர், மகாவிஷ்ணு
அதிர்ஷ்ட ரத்தினம்: பவளம்
வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன்கோவில்