ஆனி மாத வளர்பிறையில் வரும் தேவசயன ஏகாதசி, மகாவிஷ்ணுவின் அருளையும், நம் பாவங்களைப் போக்கி புண்ணியங்களைத் தரும் ஒரு முக்கிய நாளாகும். தேவர்களும் பெருமாளும் தெய்வீக யோக நித்திரைக்குச் செல்லும் இந்த புனித நாளில், அதன் சிறப்புகள், தத்துவம் மற்றும் அறிவியல் காரணங்களை ஆழமாக ஆராய்வோம்.
தேவசயனி ஏகாதசி சிறப்புகள்
ஆஷாட மாதமான ஆனி மாத வளர்பிறையில் வரும் தேவசயனி ஏகாதசி, தேவர்களும் பெருமாளும் தெய்வீக நித்திரைக்கு செல்வதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. ஜோதிடம் மற்றும் ஆன்மீக ரீதியாக மிக முக்கியமான இந்த நாளில், தேவசயனி ஏகாதசி துவங்கி, பிரபோதினி ஏகாதசி வரையிலான 4 மாதங்கள் மகாவிஷ்ணு நித்திரையில் இருப்பதாகவும், இந்த நான்கு மாதங்களும் பெருமாளுக்கு பதில் சிவ பெருமானே காத்தல் தொழிலை மேற்கொள்வார் என்றும் புராணங்கள் சொல்கின்றன.
இந்த நான்கு மாதங்களும் பக்தர்கள் உலகியல் இன்பங்களை குறைத்து, ஆன்மிக சிந்தனையில் ஈடுபட்டு இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. பெருமாளின் இந்த மாத உறக்கத்திற்கு புராணங்களில் பல கதைகளும் சொல்லப்படுகின்றன.
தேவசயனி ஏகாதசி 2025 தேதி மற்றும் அதன் முக்கியத்துவம்
ஆஷாட ஏகாதசி அல்லது தேவசயனி ஏகாதசி, மகாவிஷ்ணுவின் யோக நித்திரை எனப்படும் பிரபஞ்ச உறக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்த ஆழமான ஆன்மீக நாளில், பக்தர்கள் விரதம் அனுசரித்து, மகாவிஷ்ணுவுக்குப் பிரார்த்தனை மற்றும் பக்தியில் நேரத்தைச் செலவிடுகிறார்கள். மகாவிஷ்ணு நான்கு மாதங்கள் ஓய்வெடுப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இக்காலத்தில் திருமணங்கள் போன்ற சுப காரியங்கள் நடைபெறுவதில்லை. தேவசயனி ஏகாதசி உள் அமைதிக்கான ஒரு தருணத்தை வழங்குகிறது. மகாவிஷ்ணு பிரபோதினி ஏகாதசி வரை பிரபஞ்ச அமைதியில் ஓய்வெடுக்கும்போது, நாம் சிந்திப்பதற்கும், ஆன்மீக ரீதியாக புத்துணர்ச்சி பெறுவதற்கும், தெய்வீக சக்திகளுடன் இணைவதற்கும் இது ஏற்ற காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, தேவசயனி ஏகாதசி ஜூலை 6 ஆம் தேதி வருகிறது.
பெருமாள் ஏன் நான்கு மாதங்கள் உறங்குகிறார்?
புராணங்களின்படி, இந்த நேரத்தில் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பிரபஞ்ச உறக்கத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், தாராள குணம் கொண்ட மற்றும் சக்தி வாய்ந்த அசுர மன்னனான மகாபலி சக்கரவர்த்தி தொடர்புடைய மற்றொரு அழகான கதையும் உள்ளது.
விஷ்ணு வாமனராக அவதாரம் எடுத்த போது, அவர் மூன்று அடி நிலத்தைக் கேட்டார். மகாபலி சம்மதித்தார். வாமனன் இரண்டு அடிகளில் பூமி மற்றும் ஆகாயத்தை அளந்தார். வேறெங்கும் இடம் இல்லாததால், மகாபலி தனது தலையை அளித்தார். அவரது பக்தியால் கவரப்பட்ட மகாவிஷ்ணு, அவருக்கு ஒரு வரம் அளித்தார். அதாவது பாதாள லோகத்தில் (கீழ் உலகம்) தன்னைச் சந்திக்கலாம் என்று. ஒவ்வொரு ஆண்டும் சதுர்மாஸ் காலத்தில் அங்கே அவருடன் தங்குவதாக விஷ்ணு உறுதியளித்தார். இது தமிழ் மக்கள் பரம்பரை பரம்பரையாக நம்பி வரும் கதை.
பெருமாளின் உறக்கம் உணர்த்தும் தத்துவம்
இந்தக் கதை பாரம்பரியத்திற்கு ஆழத்தைச் சேர்க்கிறது, அதாவது தூய பக்தி இருக்கும் இடத்தில் தெய்வம் தானாக தேடி சென்று தனது பக்தர்களுக்கு அருள் புரிவார் என்பதை நினைவூட்டுகிறது. இந்த மாதங்களில், பக்தர்கள் தவம், எளிமை மற்றும் ஆன்மீக வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறார்கள். இது தெய்வம், தன் மீது உண்மையாக பக்தி கொள்ளும் பக்தர்களை தேடி சென்று அருள் செய்யும் காலமாக கருதப்படுகிறது. பிரபோதினி ஏகாதசி அன்று, மீண்டும் பெருமாள் கண் விழிக்கும் காலம் புதிய துவக்கத்திற்கான காலமாக கருதப்படுகிறது. இதனால் தான் இந்த மாதத்தில் சுப காரியங்கள் மீண்டும் துவங்கப்படுகிறது.
தேவசயனி ஏகாதசிக்கு அறிவியல் காரணம் என்ன?
பொதுவாக ஆனி-ஆடி மாதங்கள் காற்றடிக்கும் காலங்களாகும். இந்த மாதத்தில் மழையில் பருவம் தவறி பெய்யும். இதனால் இந்த மாதத்தில் விளைச்சல் செய்தால் அது முளைக்காது. அதற்கு பிறகு மழைக்காலம் துவங்கும் போதும் நிலத்தில் அதிக நீர் தேங்கும் என்பதால் விவசாய தொழில் செய்ய மாட்டார்கள். விவசாய பணிகள் இல்லாமல் மனிதர்கள் ஓய்வில் இருக்கும் நேரத்தில் தெய்வத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதற்காக இத்தகைய வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டது.
மீண்டும் பெருமாள் கண் விழிக்கும் போது இவர்கள் உழவு தொழில், சுப காரியங்கள் ஆகியவற்றை துவங்குவார்கள். இவைகள் விதைகள் முளைக்க ஏற்ற காலநிலையாகவும் இருக்கும். அப்போது விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடை செய்வார்கள். ஜோதிட ரீதியாகவும் இந்த காலம் முக்கியத்துவம் பெறுகிறது.