நவகிரகங்களில் மங்களகரமானதும், சுபகிரகமுமாகிய குரு பகவான் பற்றி பலரும் அறியாத அற்புதமான தகவல்கள், அவரது பலன்கள் மற்றும் பரிகாரங்கள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம். ஞானம், செல்வம், புத்திரபாக்கியம் போன்ற அனைத்து சுபகாரியங்களுக்கும் இவரே அதிபதி.
குரு பகவானின் தோற்றமும் சிறப்புகளும்
ஆங்கிரச முனிவருக்கும் ஸ்ரத்தா தேவிக்கும் மகனாகப் பிறந்தவர் தேவர்களின் குருவான "பிரகஸ்பதி". தவத்தில் ஈடுபட்டு சிவபெருமானின் அருளால் நவகிரகங்களில் ஒருவராகவும், தேவர்களுக்கு குருநாதராகவும் விளங்கும் பேறு பெற்றார். இவருக்குரிய திசை வடக்கு ஈசான்யம்; புஷ்பராக மாலையை அணிந்தவர். தண்டம், கமண்டலம், அட்சமாலை, வரத ஹஸ்தம் கொண்ட கோலம் உடையவர். எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரியனுக்கு வடக்கில் அமர்பவர். இவருக்குரிய எண் 3. அதிதேவதை பிரம்மா, பிரத்யதி தேவதை இந்திரன். இவர்களை வணங்கினால் குருவருள் கிடைக்கும்.
குரு பகவான் நீதிகாரகர், திரிலோகேசர், லோக பூஜ்யர், கிரகாதீசர், கருணைக்கடல், தூயவர், நீதி சாஸ்திர ஆசிரியர், களங்கம் அற்றவர் என பலவாறாகப் போற்றப்படுகிறார். தனம் மற்றும் புத்திரகாரகர் என்பதால் பொருட்செல்வம், குழந்தைச் செல்வம் இரண்டுக்கும் இவரே அதிபதி. திட்டையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரை வழிபட்டு கிரகங்களில் சுபகிரகமாகும் பேறு பெற்றதால் ராஜகிரகம் என சிறப்பிக்கப்படுகிறார்.
குரு திசை மற்றும் பலன்கள்
குரு திசைக்குரிய காலம் 16 ஆண்டுகள். தான் இருக்கும் ராசியில் இருந்து 5, 7, 9 ஆகிய பார்வைகளால் நன்மையை வழங்குவார். "குரு பார்க்க கோடி நன்மை" என்பார்கள். வாழ்வின் எல்லா நலன்களையும் வளங்களையும் தருபவர் குருபகவான். குருவின் அருள் இருந்தால் முட்டாளும் அறிவாளியாகலாம். மாணவர்கள் இவரை வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர். திருமண பந்தத்திற்கு ஆதாரமாக இருப்பவர் குருபகவான். இவரின் அருள் இருந்தால் எளிதில் திருமண யோகம் அமையும். நாட்டுக்குத் திறமையானவர்களைக் கொண்டு ஆள வைப்பதும், நவீன அறிவியல் வித்தைகளைக் கொடுப்பதும் இவரே. எனவே இவரை வணங்கினால் நாட்டுக்கு நன்மை பயக்கும்.
ஜாதகத்தில் குருவின் நிலை
குருபகவானின் பார்வை ஜாதகத்தில் பலமாக இருந்தால் ஞானம், தெளிந்த அறிவு, ராஜ யோகம், நிதி, நீதி, பணப்புழக்கம், நல்ல உறவுகள் அமையும். தனுசு மற்றும் மீனம் ஆகியவை குரு பகவானின் சொந்த வீடுகளாகும். ஞானிகளையும், மேதைகளையும் உருவாக்குபவர் இவரே.
குரு பகவானை வழிபடும் முறைகள்
சனியைச் சாய்வாய் கும்பிடு, குருவை நேராய் நின்று கும்பிடு என்பார்கள். எல்லா தெய்வங்களுக்கும் மற்றவரைக் கொண்டு வழிபாடு செய்யலாம். குரு பகவானை மட்டும் அவரவரே வழிபட்டால் தான் நன்மை கிடைக்கும். அதிகாலையில் குருமுகத்தில் விழித்தால், நினைத்த காரியம் யாவும் வெற்றி பெறும்.
பரிகார தலங்கள்
- தென்குடித்திட்டை
- ஆலங்குடி
- திருவலிதாயம் (பாடி)
- திருச்செந்தூர்
- குருவித்துறை
- ஆழ்வார்திருநகரி
- திருத்தணி
வழிபாட்டுப் பொருட்கள்
குரு பகவானுக்கு உகந்த தானியம் – கொண்டைக் கடலை, கிழமை – வியாழன், நிறம் – மஞ்சள், ரத்தினம் – புஷ்ப ராகம், உலோகம் – பொன், ஆடை – மஞ்சள் ஆடை. சாந்த மூர்த்தியாக விளங்கும் குருபகவான், கிழக்கு நோக்கி அமர்பவர். குளுமையான பொருட்களை விரும்புபவர். தயிர்ச்சாதம், கற்கண்டு சாதம், கொண்டைக் கடலை, மஞ்சள் வாழை, பால், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு வைத்து வியாழக்கிழமை அன்று மஞ்சள் வண்ண மலரால் அலங்கரித்து தீபம் ஏற்றினால் குருவருள் கிடைக்கும். பகலில் வழிபடுவது சிறப்பு.