காணும் பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையின் நிறைவு நாள். கனு பொங்கல், கன்னி பொங்கல் எனவும் அழைக்கப்படும் இது, உறவுகளின் ஒற்றுமையையும், அன்பையும் கொண்டாடும் ஒரு சிறப்பு நாளாகும். ஜோதிட ரீதியாகவும் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.
காணும் பொங்கல் - பித்ரு தோஷம் நீக்கும் பரிகாரம்
இந்த நாளில் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெறுவது மிகவும் முக்கியம். வெளியூர்களில் வசிக்கும் உறவினர்களை சந்தித்து அன்பு பரிமாறிக் கொள்வது காணும் பொங்கலின் சிறப்பம்சம். பெரியோர்கள் இல்லாத வீடுகளில், பித்ரு தோஷங்கள் நீங்கவும், முன்னோர்களின் ஆசிகளைப் பெறவும் சில எளிய பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.
காணும் பொங்கல் அன்று காகத்திற்கு தானம் அளிப்பது மிக சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. ஒரு புதிய பிஸ்கெட் பாக்கெட்டையோ அல்லது புதிதாக சமைத்த உணவையோ காகத்திற்கு அளிக்கலாம். காகத்தை நம்முடைய முன்னோர்களாக நினைத்து கையெடுத்துக் கும்பிட்டு, குடும்பம் சிறப்பாக அமையவும், பித்ரு தோஷங்கள் நீங்கவும், செல்வ வளம் பெருகவும் வேண்டிக்கொள்ள வேண்டும்.
முக்கிய எச்சரிக்கை:
எந்தக் காரணத்தைக் கொண்டும் காகத்திற்கு பழைய சாதத்தையோ, எச்சில் பட்ட உணவையோ படைக்கக் கூடாது. இது முன்னோர்களின் கோபத்தையும், பாவத்தையும் நமது குடும்பத்திற்கு பெற்றுத்தரும். இதனால் செல்வ வளம் குன்றும்.
எந்த ஒரு வீட்டில் பித்ருக்களின் தோஷம் இல்லையோ, அவர்களுக்கு அனைத்து விதமான செல்வ நலன்களும் கிடைக்கும். எந்தக் குறையும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்படாது. குறைகள் இல்லாத வீட்டில் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
கன்னிப் பெண்களுக்கு திருமண யோகம்
நீண்ட நாட்களாக வரன் அமையாமல் திருமணத்திற்காக காத்திருக்கும் கன்னிப் பெண்கள், காணும் பொங்கல் நாளில் ஒரு சிறப்பு பரிகாரத்தை மேற்கொள்ளலாம். பொங்கல் பானையில் கட்டப்பட்ட மஞ்சள் கொத்துக்களை சுமங்கலி பெண்களிடம் இருந்து தானமாகப் பெற்றால், அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் அவர்களுக்கு திருமண யோகம் கூடி வரும் என்று தமிழ் மரபு கூறுகிறது.