நம் நாட்டில் உள்ள மிக முக்கியமான புண்ணிய தலங்களான காசி மற்றும் ராமேஸ்வரம் யாத்திரையின் ஆழமான ஆன்மிக அர்த்தத்தை இங்கு காணலாம். காசிக்குச் சென்றால் ஏதாவதை ஒன்றை விட்டு விட வேண்டும் என்ற நம்பிக்கையின் பின்னணியில் உள்ள உண்மை என்ன?
காசி ராமேஸ்வரம் யாத்திரையின் மகத்துவம்
காசியும், ராமேஸ்வரமும் மிக முக்கியமான புண்ணிய தலங்களாகும். காசிக்குச் சென்றவர்கள் கண்டிப்பாக ராமேஸ்வரம் சென்று, தனுஷ்கோடியின் புனித நீராடி, ராமநாத சுவாமியை தரிசித்தால் மட்டுமே அவர்கள் காசி யாத்திரை சென்ற முழு பயனையும் அடைய முடியும் என்பது ஐதீகம். இந்த ஆன்மிக திருத்தலங்களுக்கு யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த வயதில் வேண்டுமானாலும் செல்லலாம். இவை ஆன்மிக அதிர்வலைகள் அதிகம் நிறைந்த திருத்தலங்கள்.
காசி என்பது முக்தி தலமாக போற்றப்படுகிறது. பிறவா வரம் வேண்டி இறைவனின் திருத்தலங்களை நாடிச் செல்லும் பக்தர்கள், புண்ணிய நதியான கங்கையில் நீராடி விட்டு, முன்னோர்களுக்காக பிண்டம் வைத்து வேண்டுதல் செய்வர். காசியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்களின் ஆசி பரிபூரணமாக கிட்டும் என்பது நமது இந்து மத நம்பிக்கை.
காசிக்குச் சென்றால் எதை விட வேண்டும்? உண்மை என்ன?
இந்துக்களின் புனிதத்தலமாக விளங்கும் காசியில் ஓடும் கங்கையில் நீராடினால், நாம் செய்த பாவங்கள் அனைத்தும் தொலையும் என்பது மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. கங்கையில் நீராடிவிட்டு பாவங்கள் நீங்கி, புது மனிதனாக பிறப்பெடுக்கும் போது, மீண்டும் இவ்வுலக சுக போகங்களில் பற்று கொண்டு விடக் கூடாது. மீண்டும் அழியும் பொருளின் மீதும் அதிகப் பற்றோ அல்லது விருப்பமோ வந்துவிடக் கூடாது.
இனி இறைவன் ஒருவன் மட்டுமே கதி என மனதில் தியானித்து இருக்க வேண்டும் என்கிற அர்த்தத்தில் தான், பழையவைகள் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும் என்றார்கள். எந்த ஒரு பொருளின் மீதும் அதிக ஆசையோ, பற்றோ வைக்காமல் வாழப் பழகுபவனுக்கு, ஆணவமும், அகம்பாவமும் தானாகவே அழிந்து விடும். இதன் பொருட்டு தான் காசிக்குச் சென்றால், அழியும் பொருட்களின் மீது தங்களுடைய பிடிப்பை விட்டுவிட்டு வர வேண்டும் என்பார்கள். இதுவே நாளடைவில் காசிக்குச் சென்றால் எதையாவது விட்டு வர வேண்டும் என்று மாறியது.
விட வேண்டியது பிடித்த உணவுகளையோ அல்லது காய் கனிகளையோ மட்டுமல்ல. காமக் குரோத மனமாச்சர்யங்களை, அக அழுக்குகளை விட்டு வந்து மீண்டும் பிறவாத பெரும் வரம் பெற வேண்டும்.
முக்கிய அம்சங்கள்
- புண்ணிய சங்கமம்: காசி மற்றும் ராமேஸ்வரம் யாத்திரை முழுமையான ஆன்மிகப் பலன்களைத் தரும்.
- முக்தி ஸ்தலம்: காசியில் கங்கை நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் இடுவது பெரும் புண்ணியம்.
- உண்மை தியாகம்: காசிக்குச் சென்றால் விட்டு வர வேண்டியது உலகப் பற்றுகளே தவிர, உணவுப் பழக்கவழக்கங்கள் அல்ல.
- உள்ளத்து அமைதி: உலக சுகபோகங்களில் பற்று நீக்கி வாழ்வது மன அமைதிக்கு வழிவகுக்கும்.
- ஜோதிடப் பலன்: இத்தகைய ஆன்மிகப் பயணங்கள் ஜோதிடம் கூறும் நல்லதிர்வுகளையும், உள்ளத்து அமைதியையும் தந்து, உங்கள் வாழ்வை மெருகூட்டும்.