உலகிலேயே முதல் ஏகாதசி விரதமான உத்பன்ன ஏகாதசி (Utpanna Ekadashi) பற்றிய அரிய தகவல்கள், அதன் தோன்றிய வரலாறு, முக்கியத்துவம் மற்றும் ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிப்பதன் மூலம் கிடைக்கும் அளப்பரிய பலன்கள் பற்றி இங்கு விரிவாக அறிந்துகொள்ளலாம். ஜோதிடம்360 உங்கள் ஆன்மிக தகவல்களுக்கு நம்பகமான வழிகாட்டி.
உலகின் முதல் ஏகாதசி விரதம்: உத்பன்ன ஏகாதசி
உத்பன்ன ஏகாதசி, இதனை உற்பத்தி ஏகாதசி என்றும் அழைப்பர். இதுவே உலகில் தோன்றிய முதல் ஏகாதசி விரதம் ஆகும். எனவே இது இந்தப் பெயர் பெற்றது. இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் இந்த விரதம் தோன்றிய கதையை பற்றி எடுத்துரைக்கிறார்.
உத்பன்ன ஏகாதசி கதை: முரண் அசுரனின் முடிவு
சத்யயுகத்தில், சந்திராவதி எனும் நகரத்தை தலைநகரமாக கொண்டு, முரன் என்றொரு பயங்கரமான ராட்சசன் வாழ்ந்து வந்தான். இந்திரன் முதலிய தேவர்களை வென்று இந்திர பதவியை பறித்துக்கொண்டு தேவர்களை சுவர்க்கத்தை விட்டு விரட்டியடித்து மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். அவனது கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் அனைவரும் பூமியில் மறைந்து வாழ்ந்து வந்தனர்.
பின்னர், இன்னும் எவ்வளவு காலம் தான் இவ்வாறு ஒளிந்து வாழ்வது? இதற்கொரு முடிவே கிடையாதா? என்று எண்ணி இத்துன்பத்திலிருந்து விடுபடத் தகுந்த உபாயம் கூறி தங்களைக் காக்கும்படி அனைவரும் மகாதேவரை சரணடைந்தனர். மகாதேவர், தேவர்கள் அனைவரும் பாற்கடலில் உறையும் ஜகத்ரட்சகனாகிய இறைவன் ஸ்ரீஹரியை (மகாவிஷ்ணுவை) சரணடையுங்கள். அவர் நிச்சயம் உங்களைக் காத்தருள்வார் என்று திருவாய் மலர்ந்தருளினார். அதனைக் கேட்ட தேவர்கள் அனைவரும், ஆதி சேஷன் மேல் யோக நித்திரையில் உறையும் இறைவன் ஸ்ரீஹரி வசிக்கும் பாற்கடலுக்கு சென்று அவரைப் பலவாறாகப் போற்றி துதித்தனர்.
தேவர்களின் வேண்டுதலைக் கேட்ட மகாவிஷ்ணு, முரன் அசுரனின் அட்டூழியங்களை அறிந்தார். பிரம்ம தேவரின் குலத்தில் தோன்றிய நாடீஜங்கன் என்னும் கொடிய அரக்கனின் மகனே இந்த முரன் என்னும் அசுரன். இவன் அதீத பலம் கொண்டு விளங்குவதால், தேவர்களாகிய எங்களை தேவலோகத்திலிருந்து விரட்டியடித்து விட்டு, அசுரர்களை இந்திரன், வருணன், அக்னி, யமன் என லோகபாலகர்களாக நியமித்து விட்டான். எனவே இவனிடமிருந்து உலகையும், எங்களையும் காத்து ரட்சிக்க வேண்டும் பிரபோ என்று தேவர்கள் அனைவரும் அவரை வேண்டினர்.
1000 ஆண்டுகள் போரிட்ட மகாவிஷ்ணு
இதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி வெகுண்டெழுந்து, தேவர்கள் அனைவரையும் தனது தலைமையில் அழைத்துக் கொண்டு சந்திராவதி பட்டினத்தின் மீது தாக்குதல் தொடுக்கச் சென்றனர். இதனையறிந்த முரனும், அவர்களோடு போர் புரியத் துவங்கினான். பகவான் தனது சக்ராயுதத்தினால் அசுரர்களின் அஸ்திர வித்தைகளையும், மாயா ஜாலங்களையும் நாசம் செய்தார். அவனை அழிக்க இறைவன் தொடுத்த அனைத்து அஸ்திரங்களையும், தகர்த்தெறிந்தான். அனைத்து விதமான அஸ்திர பிரயோகங்களுக்குப் பிறகும், பகவானால் அவனை வெல்ல முடியவில்லை. எனவே பகவான் அவனுடன் மல்யுத்தத்தில் ஈடுபட்டார். இறைவன் ஸ்ரீஹரி தேவர்களுக்காக அவனுடன் 1000 ஆண்டுகள் விடாமல் போர் புரிந்து கொண்டிருந்தார்.
ஏகாதசி தேவி தோன்றிய கதை
இடைவிடாது நிகழ்ந்த போரின் காரணமாக மிகவும் களைப்புற்றவராய் பகவான் சாந்தத்துடன் ஓய்வெடுக்க வேண்டி பத்ரிகாஸ்ரமத்தில் 28 கஜ தூரம் கொண்ட ஒரு துவாரத்துடன் கூடிய ஹேமவதி என்னும் பெயர் கொண்ட குகையில் சென்று சயனத்தில் ஆழ்ந்தார். முரனும் அந்தக் குகையில் நுழைந்தான். பகவான் சயனித்திருப்பதைக் கண்டு அவரைக் கொல்ல ஆயத்தமானான். அவனுடைய எண்ணம் ஸ்ரீஹரியை கொன்று விட்டால், காலம் முழுவதும் நாம் எந்த எதிரி பயமுமின்றி வாழலாம் என்பதிலேயே இருந்தது.
முரன் வாளை உருவி பகவானை கொல்ல நெருங்கிய போது, அவருடைய தேகத்திலிருந்து திவ்யவஸ்திரங்களுடன், சகல ஆயுதங்களோடும் அதி அற்புதமான அழகுடன் கூடிய ஒரு மங்கை தோன்றினாள். இத்தனை பலசாலியான, அழகான மங்கை திடீரென எங்கிருந்து தோன்றினாள் என்றெண்ணிக் கொண்டிருக்கும் போதே, அவள் ஓங்கார சப்த கர்ஜனையோடு அவனுடன் ஆவேசமாகப் போர் புரியத் தொடங்கினாள். சிறிதுநேரம் அஸ்திரங்களை பிரயோகித்தான் முரன். அத்தனையையும் தூள் தூளாக்கினாள். அவனது ரதத்தை உடைத்தெறிந்தாள். அதனைக் கண்டு ஆத்திரமடைந்த முரன் யுத்த நியதிகளை விடுத்து பெண் என்றும் பாராமல் அவளுடன் மல்யுத்தத்தில் ஈடுபட ஆக்ரோஷமாக அவளை நோக்கி ஓடி வந்தான். ஆனால் அந்த மங்கை அவன் ஓடி வந்த வேகத்திலேயே, அவனது சிரத்தைக் கொய்து மண்ணில் வீசி அவனை யமலோகத்திற்கு அனுப்பி வைத்தாள்.
மகாவிஷ்ணுவே பாராட்டிய ஏகாதசி தேவி
விழித்தெழுந்த பகவான், தரையில் கிடந்த முரனின் உடலைப் பார்த்து இவ்வளவு பலசாலியை கொன்றது யாராக இருக்கக் கூடும் என்று எண்ணிய வேளையில், அந்த மங்கை அங்கே வந்து இறைவனை வணங்கி, பிரபோ, இந்தக் கொடிய அரக்கன், தாங்கள் சயனித்திருந்த வேளையில் தங்களைக் கொல்ல முற்பட்டதையடுத்து, அவனுடைய எண்ணத்தை அறிந்தவளாய், மூவுலகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவனை உங்களது மகாசக்தியான நான் தங்கள் சரீரத்திலிருந்து தோன்றி வதைத்தேன் என்று கூறி கரம் கூப்பி நின்றாள்.
அதைக்கேட்ட ஸ்ரீஹரி, மங்கையே, உனது இந்த செயலால் நான் மட்டுமின்றி மூவுலகும் இன்று ஆனந்தம் அடைந்திருக்கிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எனவே நீ வேண்டும் வரம் எதுவாயினும் கேள். அது எப்பேர்ப்பட்ட வரமாயினும் அதனைப் பூர்த்தி செய்கிறேன் என்றார்.
ஏகாதசி விரத பலன்கள் மற்றும் பெருமாள் அளித்த வரம்
அதை கேட்டு மகிழ்ந்த அந்த மங்கை, நாராயணா, நீங்கள் எனது செயல் கண்டு மகிழ்ந்து வரமளிக்க விரும்பினால், தாங்கள் எனக்கு அளப்பரிய சக்தியை வழங்குங்கள். அதாவது, தேவரோ, அசுரரோ, மனிதரோ, மிருகமோ, பிராணியோ, பட்சியோ எவரொருவர் நான் தோன்றிய இந்நாளில் விரதம் அனுஷ்டிக்கின்றாரோ, அவர்களுடைய பாவங்கள் அனைத்தையும அழிக்க வல்ல சக்தியை வழங்குங்கள் என்றாள்.
மேலும், எவரொருவர் இந்நாளில் விரதம் அனுஷ்டிக்கிறாரோ, அவர் பாவங்கள் அனைத்தும் நீங்கி இறுதியில் சுவர்க்கப் பிராப்தி அடைய வேண்டும். அது போல, இந்நாளில் முழு உபவாசம் இருந்து பூஜிப்பவரின் பலனில் பாதி பலனை இரவில் மட்டும் கண் விழிப்பவருக்கும், ஒரு வேளை மட்டும் உணவு உண்பவருக்கும் வழங்க வேண்டும் என்றாள். முழு உபவாசம் கொள்பவர் வாழ்வில் அனைத்துச் சுக போகங்களையும் அடைந்து இறுதியில் பல கற்பங்கள் விஷ்ணுலோகத்தில் வாழும் பேற்றினைப் பெற வேண்டும் என்றாள்.
அதனைக் கேட்ட இறைவன் ஸ்ரீஹரி மிகவும் மனமகிழ்ந்து, ஹே கல்யாணி, ஜகத்தின் நன்மை கருதி நீ கேட்ட இந்த வரத்தினை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். எனவே நீ கோரியபடியே அந்த வரத்தினை உனக்கு அளிக்கிறேன். இன்று முதல் எனது பக்தர்கள் அனைவரும் எனதருளை எளிமையாகப் பெற இந்த விரதத்தினை அனுஷ்டிப் பார்கள என்றார். அத்துடன், நீ 11ஆம் நாள் தோன்றியதால் உலகத்தோரால் இன்று முதல் நீ ஏகாதசி என அழைக்கப் பெறுவாய் என்றருளினார். எனக்குப் பிரியமான திதிகளான திரிதியை, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி ஆகிய திதிகளின் வரிசையில் நீ உயர்ந்த இடத்தை அடைந்து என்றும் என் மனதுக்கு பிரியமான திதியாகப் புகழ் பெற்று விளங்குவாய் என்று கூறி மறைந்தார்.
இவ்வாறாகக் கூறிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர், விரதத்தை 12ஆம் நாளான துவாதசி நாளன்று இறைவனை வணங்கி விரதத்தை நிறைவு செய்வோர் அஸ்வமேத யாக பலனை அடைவதோடு சகல புண்ணிய தீர்த்தங்களிலும் புண்ணிய நீராடிய பலனையும் அடைவர் என்றார். மேலும் எவரொருவர் இந்நாளைப் பற்றிக் கேட்கிறாரோ அல்லது சொல்கிறாரோ, அவர் இறுதியில் விஷ்ணுலோகத்தை அடைவர் என்று பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கின்றது. தமிழ் ஆன்மிகத்தில் ஏகாதசி விரதம் சிறப்பிடம் பெறுகிறது.
முக்கிய குறிப்புகள்: உத்பன்ன ஏகாதசி
- தோற்றம்: உத்பன்ன ஏகாதசி என்பது உலகின் முதல் ஏகாதசி விரதம் ஆகும், இது மகாவிஷ்ணுவின் உடலில் இருந்து ஏகாதசி தேவி தோன்றிய தினத்தை குறிக்கிறது.
- முரன் அசுரன்: ஏகாதசி தேவி, தேவர்களை துன்புறுத்திய முரன் அசுரனை வதம் செய்து, மகாவிஷ்ணுவுக்கு உதவினார்.
- வரம்: ஏகாதசி தேவிக்கு, தான் தோன்றிய தினத்தில் விரதம் அனுஷ்டிப்பவர்களின் பாவங்களை போக்கி, அவர்களுக்கு நற்கதி அளிக்கும் வரத்தை மகாவிஷ்ணு வழங்கினார்.
- பலன்கள்: உத்பன்ன ஏகாதசி விரதம் மேற்கொள்வோர் பாவங்கள் நீங்கி, சுவர்க்கப் பிராப்தி அடைந்து, அனைத்து சுகங்களையும் பெறுவர்.
- விரத நிறைவு: துவாதசி அன்று விரதத்தை நிறைவு செய்பவர்கள் அஸ்வமேத யாக பலனையும், சகல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும் அடைவர்.