நவராத்திரி காலத்தில் வழிபடப்படும் மிக உக்கிரமானதும் சக்தி வாய்ந்ததுமான அம்பிகை வடிவமே மகிஷாசுரமர்த்தினி. மகிஷாசுரமர்த்தினி கதை, அவர் தோன்றியதன் நோக்கம், மற்றும் அவரை வழிபடுவதன் முக்கியத்துவம் பற்றி ஜோதிடம்360 இங்கே விளக்குகிறது.
மகிஷாசுரமர்த்தினி தோற்றத்தின் பின்னணி
நவராத்திரியில் வழிபடப்படும் அம்பிகையின் மிக முக்கியமான வடிவங்களில் ஒன்று மகிஷாசுரமர்த்தினி. மகிசாசுரன் என்ற அரக்கனை அழிக்க உருவாக பராசக்தியின் வடிவமே மகிஷாசுரமர்த்தினி ஆவாள். முப்பெரும் தேவியர்கள் ஒன்றிணைந்து எடுத்த உக்கிரமான வடிவமே மகிஷாசுரமர்த்தினி வடிவமாகும்.
சாந்த சொரூபினியான அம்பிகை எதற்காக மூவரும் ஒன்றிணைந்த உக்கிர வடிவமாக மகிஷாசுரமர்த்தினியாக அவதாரம் எடுக்க வேண்டும்? இதற்கு காரணமாக அமைந்த கதை பற்றி தெரிந்து கொள்ளலாம். முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக் கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனிட ம் சென்று முறையிட்டனர்.
தேவர்களின் சக்தி ஒருங்கிணைப்பு
பிரம்மனின் ஆலோசனைபடி, சிவன் தேவர்களின் துன்பத்தைப் போக்க எண்ணி, மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர். அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக் கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார். இதனைப் போன்றே பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலிலிருந்து சக்தியினை வெளிக் கொணர்ந்து ஒரே வடிவில், ஒளி வடிவில் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியை தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.
மகிஷாசுர வதம்
மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாக போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது. வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது. பூமித்தாய் அந்த பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது.
மகிசின் அசுரப் படைகளை தேவிலாவகமாக முறியடித்து அசுரர்களை கொய்து, அழித்தாள் அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக் கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.
மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரத்தின் மகிமை
இந்த அன்னையின் வடிவத்தை போற்றி பாடப்பட்டதே மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் ஆகும். இது அம்மனை வழிபட, தீமைகளில் இருந்து விடுபட மிகவும் சக்தி வாய்ந்த ஸ்லோகங்களில் ஒன்றாகும். இது பயத்தை போக்கி, தைரியத்தை வழங்கக் கூடியதாகும். "அயிகிரி நந்தினி" என துவங்கும் 21 பாடல்களை கொண்ட இந்த ஸ்லோகங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தக் கூடிய மந்திரமாகும்.
நவராத்திரி காலத்தில் தினமும் மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகத்தை படித்து வருவதும், காதுகளால் கேட்பதும் மிகவும் விசேஷமானதாகும். இந்த சக்தி வாய்ந்த ஸ்தோத்திரத்தை உச்சரிப்பதன் மூலம் தீமைகளில் இருந்து விடுதலை, பயம் நீங்குதல், தைரியம் அதிகரித்தல், மற்றும் வாழ்வில் அற்புதங்களை அனுபவிக்கலாம்.