சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஆடிக் கிருத்திகை, வார விடுமுறை போன்ற நாட்களில் ஒரு சூப்பரான ஆன்மிக சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கும் செலவே இல்லாமல் சென்று, முருகனை கண் குளிர தரிசனம் செய்ய ஓர் அரிய வாய்ப்பு! இந்து சமய அறநிலையத்துறை வழங்கும் இந்த அற்புதமான இலவச ஆன்மிகப் பயணம் பற்றி முழுமையாக அறிய தொடர்ந்து படியுங்கள்.
தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஊர்களுக்கும் ஆன்மிக புனித பயணம் அழைத்துச் செல்லும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பிலும் காசி முதல் ராமேஸ்வரம் வரை, ஆடி அமாவாசை ராமேஸ்வரம் சுற்றுலா, ஆடி மாதத்தில் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா, சென்னையில் உள்ள அம்மன் கோவில்கள் சுற்றுலா, ஒரே நாளில் திருப்பதி பயணம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக சுற்றுலா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
முருகன் அறுபடை வீடுகளுக்கு இலவச ஆன்மிக சுற்றுலா திட்டம்
அதேபோல், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும் இந்த ஆண்டு முருகப் பெருமானின் புகழ்பெற்ற அறுபடை வீடுகள் ஆன திருச்செந்தூர், பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, பழமுதிர் சோலை, திருத்தணி ஆகிய ஆறு கோயில்களுக்கும் 2000 பக்தர்களை 5 குழுக்களாக பிரித்து இலவசமாக ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல உள்ளது. இந்த முருகன் ஆலயங்கள் அனைத்திலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து திரும்ப முழு ஏற்பாடுகளும் செய்யப்படும். இது ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட தமிழ் பக்தர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு.
பங்கேற்பதற்கான முக்கிய நிபந்தனைகள்
- இந்த ஆன்மிகச் சுற்றுலாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 70 வயதிற்குள் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
- பயணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
- துண்டு, சோப்பு, டூத் பிரஷ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கிட் ஒன்றும் வழங்கப்படும்.
- பக்தர்கள் இந்த ஆன்மிக பயணத்தில் ஒருமுறை மட்டுமே பங்கேற்க முடியும்.
- பயணம் செல்லும் பக்தரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான வருமான சான்று வட்டாட்சியரிடம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த ஆன்மிக சுற்றுலா பற்றி மேலும் விபரம் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் hrce.tn.gov.in என்ற அறநிலையத்துறையின் இணையதளம் வழியாகவோ அல்லது 1800 4251757 என்கிற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இந்த புனித யாத்திரை செல்லலாம். இது தமிழ் நாட்டின் ஒரு சிறந்த ஆன்மிக முன்னெடுப்பு.
இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்திலேயே அறுபடை வீடு முருகன் கோயில்களுக்கும் ஆன்மிக சுற்றுலா செல்வதற்கான விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பதிவிறக்கம் செய்து, பயணம் செய்பவரின் புகைப்படம் ஒட்டப்பட்ட விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். பயணம் செய்பவரின் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஆதார் எண், ஆண்டு வருமானம் உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு, அதற்கான ஆவணங்களையும் இணைத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அருகில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.