வாழ்வில் வேலை, அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு என சகல வசதிகளுடன் உயர்ந்த நிலையை அடைய முருகப் பெருமானின் அருளைப் பெற தினமும் இந்த சக்திவாய்ந்த கந்தர் அலங்காரப் பாடலைச் சொல்லுங்கள். இது உங்களின் கர்மவினைகளை நீக்கி, வாழ்வில் அபாரமான உயர்வை நிச்சயம் தரும்.
வேலை, அந்தஸ்து, செல்வம், செல்வாக்கு, சகல வசதி, மதிப்பு, மரியாதை என அனைத்து வகைகளிலும் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசை. அதற்காகத் தான் அனைவரும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்ன தான் கடுமையாக உழைத்தாலும், உண்மை மற்றும் நேர்மையைப் பின்பற்றி நடந்தாலும் இருக்கும் நிலையில் இருந்து கொஞ்சம்கூட முன்னேற்றம் ஏற்படவில்லை என வருத்தப்படுகிறீர்களா? முருகப் பெருமானின் இந்த சக்திவாய்ந்த கந்தர் அலங்காரப் பாடலை மட்டும் தினமும் சொல்லுங்கள். உங்களின் வாழ்க்கை உயர்ந்த நிலைக்கு செல்வதை காண முடியும்.
கந்தர் அலங்காரப் பாடல்:
"சேந்தனை கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித் தோனை விளங்கு வள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே."
இப்பாடலின் விளக்கம்: சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியிருப்பவரை, சிவந்த வேலுக்குத் தலைவரை, செந்தமிழ் நூல்கள் பரவும்படி செய்பவரை, விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவரை, பரிமளம் மிகுந்த கடப்ப மலரால் ஆகிய மாலையை அணிந்தவரை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவரை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் உண்டாகாது.
இது அருணகிரிநாதரால் பாடப்பட்ட கந்தர் அலங்காரத்தில் வரும் 72வது பாடல் ஆகும். அருணகிரிநாதர் எத்தனையோ ஆயிரம் பாடல்களை முருகப் பெருமான் மீது பாடியுள்ளார். இப்பாடலை சொல்வதற்கு நேரம், காலம், குளிக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என எந்த கட்டாயமும் கிடையாது. எப்போது எல்லாம் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
மனித உடலில் இருக்கும் போது அருணகிரிநாதர் கடைசியாகப் பாடியது தான் கந்தர் அலங்காரம். அதற்குப் பிறகு கிளியாக மாறி அவர் பாடியது, கந்தர் அநுபூதி என அழைக்கப்படுகிறது. முருகப் பெருமானின் திருநாமங்களில் கந்தன் என்ற திருநாமத்திற்குத் தனிச்சிறப்பு உண்டு. கந்தன் என்றால் ஒன்றுபட்டவன் என்றும், கட்டுக்குள் அகப்பட்டவன் என்றும் பொருள். அதாவது பக்தர்களின் பக்திக்கு கட்டுப்பட்டவன் என்று அர்த்தம்.
பக்தர்களின் உண்மையான பக்திக்குக் கட்டுப்படும் அந்த கந்தக் கடவுளை எப்போதும் மறக்காமல் நினைத்துக் கொண்டிருப்பவருக்கு வாழ்வில் எந்தக் குறையும் ஏற்படாது. அவருக்கு வாழ்வில் உயர்வு மட்டுமே இருக்கும். தாழ்வு, தோல்வி, சறுக்கல் என்பது ஒரு போதும் இருக்காது என்பதே இந்த பாடல் உணர்த்தும் பொருளாகும். இந்த பாடலை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல அவர்களின் கர்மவினைகள் அழிந்து, வாழ்வில் நிச்சயம் அவர்கள் உயர்வான நிலையை அடைவார்கள். இந்த பாடல் வாழ்வில் மட்டும் உயர்வைத் தருவதுடன், முக்தியையும் தரக் கூடியது என்றும் சொல்லப்படுகிறது. ஜோதிட ரீதியாகவும் முருகப் பெருமானின் அருள் நமக்கு பல நன்மைகளைத் தரும்.
இப்பாடலைச் சொல்லுவதன் முக்கிய நன்மைகள்
- வேலை, அந்தஸ்து, செல்வம் பெருகும்.
- வாழ்வில் உயர்வுடன் அபார முன்னேற்றமும் கிட்டும்.
- கர்மவினைகள் முழுமையாக நீங்கி நற்பலன்கள் கிட்டும்.
- மன அமைதி மற்றும் முக்தி கிடைக்கும்.
- எல்லாத் தடைகளும் நீங்கி, முருகப் பெருமான் அருள் கிடைக்கும்.