நடராஜர் வடிவம் சிவபெருமானின் ஆடற்கலை வடிவமாகும். பிரபஞ்சத்தின் படைப்பு, காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் குறிக்கும் இந்த நடராஜரின் திருக்கோலம், வீட்டில் ஏன் வைக்கக்கூடாது என்பது குறித்து வாஸ்து சாஸ்திர ரீதியான விளக்கங்களை இங்கு காணலாம்.
நடராஜர் உருவம் மற்றும் அதன் முக்கியத்துவம்
திருமுறைகளும், தேவாரம், திருவாசகம் ஆகியவையும் நடராஜரின் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய அசைவுகளையும், இவை அனைத்துமே மாய தோற்றங்கள் என்பதையும் பக்தர்களுக்கு விளக்குகின்றன. நடராஜரின் நடன அசைவுகளைப் பற்றி விளக்குவதே நாட்டிய சாஸ்திரம் என சொல்லப்படுகிறது. சைவர்களின் மிக முக்கியமான சிவ வழிபாட்டு வடிவங்களில் ஒன்றாகவே நடராஜரின் வடிவம் கருதப்படுகிறது. சிவபெருமானின் நடன ரூபமே, நடராஜர் வடிவமாகும். நடராஜரின் ஆடலில் தான் உலகமே இயங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
நடராஜரின் சிலையில் சுற்றி இருக்கும் நெருப்பு வளையம் என்பது அனைத்தையும் படைத்தும், அழித்தும் அண்ட நெருப்பாக சொல்லப்படுகிறது. இது பிறப்பு - இறப்பு என்ற வாழ்க்கை சுழற்சியை குறிப்பதாகவும் சொல்லப்படுகிறது. நடராஜரை ஆற்றல் சக்தியாகவும், ஆடல் கலையின் தெய்வமாகவும் இந்து மதம் குறிப்பிடுகிறது. பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு, அழிவின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஐந்தாம் மற்றும் ஆறாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கோவில்களிலேயே சிவபெருமானின் ஆடல் வடிவம் காணப்படுகிறது.
நடராஜர் சிலை வீட்டில் வைக்கக் கூடாது ஏன்? - வாஸ்து விளக்கங்கள்
நாட்டிய கலையின் கடவுளாக நடன கலைஞர்களால் போற்றப்படும் நடராஜரின் வடிவத்தை நாட்டிய பள்ளிகள், நடன அரங்கேற்றம் நடைபெறும் இடங்கள், கோவில்கள் ஆகியவற்றில் மட்டுமே பொதுவாக காண முடியும். சிவபெருமானின் லிங்கம், உருவம் ஆகிய வடிவங்களை சிறிய விக்ரஹமாக வீட்டில் வைத்து பூஜித்து, வணங்கி வந்தாலும், நடராஜர் ரூபத்தை மட்டும் யாரும் வீட்டில் வைப்பது கிடையாது. குறிப்பாக நடராஜரின் சிலையை வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்வது கிடையாது. நடராஜரை வீட்டில் வைக்கக் கூடாது என்பதற்கு வாஸ்து சாஸ்திர முறைப்படி பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன.
- அழிவின் அடையாளம்: வாஸ்து சாஸ்திரப்படி, சிவனின் நடராஜர் வடிவம் என்பது அழிவுடன் தொடர்புடையதாகும். இதனால் நடராஜரின் படம், ஓவியம், சிலை ஆகியவற்றை வீட்டில் வைக்கக் கூடாது என சொல்லப்படுவதுண்டு.
- கோபத்தின் வெளிப்பாடு: இந்து சாஸ்திரங்களும், வேதங்களும் நடராஜரை கலை திறனின் அடையாளமாகவும், பெருமான் தன்னை மறந்து ஆடுவதை போலவும் குறிப்பிடுகின்றன. இந்த நடனக் கோலம் என்பது காண்பவரை பரவசமடைய செய்து, அழகான தோற்றத்துடன் இருந்தாலும் இது சிவனின் கோபத்தை குறிப்பதாகவே சொல்லப்படுவதால் வீட்டின் பூஜை அறையில் நடராஜரின் சிலையை அல்லது வடிவத்தை வைக்காமல் இருப்பது நல்லது என வாஸ்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
நடராஜர் சிலை வைப்பதற்கான விதிகள்
ஒருவேளை நடராஜரின் சிலையை வீட்டில் வைக்க விரும்பினால், சில விதிகளைப் பின்பற்ற வேண்டும்:
- ஆக்ரோஷம் இல்லாத வடிவம்: ஆக்ரோசமான ரூபமாக இல்லாமல், மிக சிறிய அளவில் இருக்கும் வகையிலும் பார்த்துக் கொள்வது நல்லது.
- தனிப்பட்ட இடம்: நடராஜரின் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தால், அந்த இடத்தில் நடராஜரின் சிலையை மட்டுமே வைக்க வேண்டும். மற்ற தெய்வங்களின் சிலைகளை நடராஜர் சிலையுடன் சேர்த்து வைக்கக் கூடாது.
- தரையில் வைக்கக் கூடாது: நடராஜர் சிலையை ஒருபோதும் தரையில் வைக்கக் கூடாது.
- மேடை அவசியம்: நடராஜர் சிலையை எப்போதும் மேஜை அல்லது அதற்காக தனியாக ஒரு மேடை அமைத்து அதன் மீது மட்டுமே வைக்க வேண்டும்.