Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

பிள்ளையார் எறும்பு பெயர் வந்த கதை

நம் கலாச்சாரத்தில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு தனித்துவம் உண்டு. அப்படி, பிள்ளையார் எறும்பு என்ற பெயர் எப்படி வந்தது என்பதை விளக்கும் ஒரு சுவாரஸ்யமான தமிழ் கதையைப் பார்ப்போம். இது ஈசன், பார்வதி தேவி, மற்றும் விநாயகர் ஆகியோரின் திருவிளையாடலைக் குறிக்கும்.

பரமேஸ்வரனின் கருணை குறித்த சந்தேகம்

நம்முடைய வீடுகளிலும், மரத்தடியிலும் ஊறி திரியும் பல வகையான எறும்புகளில் பிள்ளையார் எறும்பும் ஒன்று. இதை சாமி எறும்பு என்றும் சொல்லி கிராமங்களில் வழிபடுவது உண்டு. இந்த எறும்பிற்கு மட்டும் பிள்ளையார் எறும்பு என்ற பெயர் எப்படி வந்தது என்ற கதையை வாங்க தெரிந்து கொள்ளலாம். முப்பத்து முக்கோடி தேவர்கள் முதல், ஓரறிவு கொண்ட உயிரினங்கள் வரை எல்லா ஜீவன்களுக்கும் படியளப்பவர் பரமேஸ்வரன். இந்தத் தொழிலை ஈசன் சரிவர கவனிக்கிறாரா? என்றொரு சந்தேகம் பார்வதிக்கு.

அதற்குத் தீர்வு காண நினைத்தாள். சிறு பாத்திரம் ஒன்றை எடுத்து வந்து அதற்குள் கறுப்பு எறும்புகள் சிலவற்றைப் பிடித்துப்போட்டு மூடி விட்டாள். "இந்த எறும்புகளுக்கு ஈசன் எப்படி உணவு அளிக்கிறார், பார்க்கலாம்" என்பது அவளது எண்ணம்.

ஈசனின் திருவிளையாடல்

மறு நாள், "ஸ்வாமி, நேற்று எல்லா ஜீவராசிகளுக்கும் படியளந்தீர்களா?" என்று ஈசனிடம் கேட்டாள். உலகநாயகி தன்னோடு விளையாடுகிறாள் என்பது ஈசனுக்குப் புரிந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "இதிலென்ன சந்தேகம். பாத்திரத்தில் நீ சிறை வைத்த எறும்புகளைப் பார்த்திருந்தால், இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காது" என்றார். பார்வதி தேவி, ஓடோடிச் சென்று பாத்திரத்தை திறந்து பார்த்தாள். சுறுசுறுப்புடன் சுற்றிக் கொண்டிருந்தன எறும்புகள். அத்துடன் சில அன்னப் பருக்கைகளும் கிடந்தன. வீணாக சந்தேகப்பட்டு விட்டோமே என வருந்தினாள் தேவி.

"மகேஸ்வரி… உனது ஐயம் விலகியதா?" குறும்பாகக் கேட்ட பரமேஸ்வரன், "சரி, சரி… விநாயகன் உன்னை தேடி கொண்டிருந்தான். போய்ப் பார்" என்றார்.

விநாயகரின் தியாகம்

விநாயகரைச் சந்தித்த பார்வதிதேவி அதிர்ந்து போனாள். ஒட்டிய வயிறும் வாடிய முகத்துடனும் இருந்தார் கணபதி. "ஏனம்மா அப்படிப் பார்க்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் தாங்கள் தான் காரணம்!” என்றார் விநாயகர். "என்னச் சொல்கிறாய் நீ?" படபடப்புடன் கேட்டாள் பார்வதிதேவி. "அன்னையே… அகிலம் ஆளும் நாயகனின் நித்திய தர்ம பரிபாலனத்தில் சந்தேகம் கொண்டது தாங்கள் செய்த முதல் தவறு. அடுத்தது அப்பாவி எறும்புகளை பட்டினி போடும் விதம் சிறையிட்டது. தாயின் பழி தனயனை தானே சாரும். எனவே, எறும்புகளின் பசியை நான் ஏற்றுக் கொண்டு தாங்கள் எனக்களித்த அன்னத்தை, எறும்புகளுக்கு இட்டேன். பட்டினி கிடந்ததால், எனது வயிறு சிறுத்துப் போனது" விளக்கி முடித்தார் விநாயகர்.

பிள்ளையார் எறும்பு என்ற பெயர் வந்த வரலாறு

பார்வதிதேவி கண் கலங்கினாள். விநாயகரை அழைத்து கொண்டு சிவனாரிடம் சென்றவள், "சுவாமி, என்னை மன்னியுங்கள் நான் செய்த தவறுக்கு நம் மகனை வதைக்க வேண்டாம்" என்று வேண்டினாள். "வருந்தாதே தேவி, பக்தர்கள் என்பால் வைக்கும் நம்பிக்கை, சற்றும் குறைவில்லாததாக இருக்க வேண்டும். "நம்பிக்கை"க்கு இணையான பூஜையோ வழிபாடோ கிடையாது. இதை, உலக மக்களுக்கு உணர்த்த நடந்த திருவிளையாடலே இது. அன்னபூரணியான நீ, உன் பிள்ளைக்கு அன்னம் அளித்தாய். அவன், அதை எறும்புகளுக்கு வழங்கினான். விநாயகனின் பெருமையைப் போற்றும் வகையில், அவை இனி பிள்ளையார் எறும்புகள் என்றே அழைக்கப்படட்டும்!" என அருளினார்.

பிறகு பார்வதியிடம், "எறும்பு உண்டது போக, மீதம் உள்ள அன்னப் பருக்கைகளை விநாயகனுக்குக் கொடு!" என்றார். அப்படியே செய்தாள் பார்வதி. அந்த பருக்கைகளை உண்ட விநாயகரின் வயிறு பழைய நிலைக்கு திரும்பியது; அவரது பசியும் தீர்ந்தது. இந்த அருளாடல் சம்பவம், தேய்பிறை சதுர்த்தி திதி நாளில் நிகழ்ந்தது. இதையே சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம் என்று கர்ண பரம்பரை கதை ஒன்று உண்டு.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிள்ளையார் எறும்புகள் என்பவை சாமி எறும்பு என்றும் அழைக்கப்படும், நமது வீடுகளிலும் மரத்தடிகளிலும் காணப்படும் எறும்பின் ஒரு வகையாகும். விநாயகப் பெருமானின் தியாகத்துடன் தொடர்புடைய கதையின் காரணமாக இந்த பெயர் வந்தது.

பார்வதி தேவியின் சந்தேகத்தை தீர்க்கவும், ஈசனின் கருணையை உணர்த்தவும், விநாயகர் எறும்புகளின் பசியை ஏற்றுக்கொண்டு, தனக்குக் கிடைத்த உணவை அவற்றுக்குக் கொடுத்தார். இந்த தியாகத்தைப் போற்றும் விதமாக, அந்த எறும்புகளுக்கு 'பிள்ளையார் எறும்புகள்' என ஈசன் பெயரிட்டார்.

இந்த அருளாடல் சம்பவம் தேய்பிறை சதுர்த்தி திதியில் நிகழ்ந்தது. இதைத்தான் நாம் சங்கடஹர சதுர்த்தி நாளாக அனுஷ்டித்து விநாயகரை வழிபடுகிறோம். இது போன்ற ஜோதிடம் சார்ந்த தினங்கள் நம் நம்பிக்கையின் ஒரு பகுதியாகும்.

Our Other Services