ரோகிணி நட்சத்திரத்தின் குண நலன்கள், திருமண பொருத்தம் மற்றும் பரிகாரங்கள்
ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான பலன்கள் (Rohini Natchathiram General Palan)
ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசியில் வரக்கூடிய நட்சத்திரமாகும், இது சந்திரனை அதிபதியாக கொண்டது. 27 நட்சத்திரங்களில் 4வதாக வரக்கூடிய இந்த நட்சத்திரம், சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் அமைந்துள்ளது.
ரோகிணி நட்சத்திரம் ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலின் முகத்தை ஆள்கிறது, அதாவது முகம், வாய், நாக்கு மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது.
பெயர் வைப்பதற்கு ஓ, வ, வி, வு ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்துக்களாகவும், வா, வீ ஆகியவை தொடர் எழுத்துக்களாகவும் பயன்படுத்தலாம்.
ரோகிணி நட்சத்திரத்தின் குண நலன்கள்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்க்கும், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என பொதுவான கருத்து உண்டு. சந்திரனை அதிபதியாக கொண்ட நட்சத்திரமாகவும், ஆடம்பரம், அழகைத் தரக்கூடிய சுக்கிரன் ஆளும் ரிஷபத்தில் இருப்பதால், இவர்கள் கலைத் துறையில் ஜொலிப்பார்கள். எந்த ஒரு கலையையும் எளிதாக கற்றுக் கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.
பெண் பிரியர்களாகவும், பொன், பொருள் மீது ஆசை அதிகமாக கொண்டவர்களாக இருப்பார்கள். இனிமையாக பேசக்கூடிய இவர்கள், பகைவர்களைக் கூட நண்பர்களாக்கிக் கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள். நேர்மை, நியாயத்துடன் வாழ நினைப்பவர்கள்.
திருமணம் மற்றும் குடும்பம்
நினைத்ததை நினைத்தபடி அடைய வேண்டும் என விரும்புபவர்கள். காதலிலும் தான் விரும்பியவரை விடா�ப்பிடியாக கடைசி வரை போராடி திருமணம் செய்து கொள்வார்கள். தன் பிள்ளைகளுக்கு அதிக சுதந்திரம் கொடுக்கக்கூடியவர்கள்.
சந்திரன் + சுக்கிரன் சேர்க்கையால் சுகபோக வாழ்க்கையை விரும்பக்கூடியவர்களாக இருப்பார்கள். அதிகம் சோம்பேறிகளாக இருப்பார்கள்.
ஆரோக்கியம்
ரோகிணி நட்சத்திர அதிபதி சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் பெற்றவர் என்பதால், இந்த நட்சத்திரத்தினருக்கு சலி, நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். தொண்டை, மூக்கு, மூட்டு வலி, கண் போன்ற பாகங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
தொழில் மற்றும் வியாபாரம்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை அற்றவர்கள். கர்வம் கொள்ளாதவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் பெரிய ஆள் என ஒதுங்காமல், வேலையை பொறுப்பாக எடுத்து செய்வார்கள்.
எந்த தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தன்னுடைய பணியாளர்களை மதிப்புடன் நடத்துவார்கள்.
கலைத்துறையில் சிறந்து விளங்குவார்கள். உணவு சார்ந்த தொழில், ஹோட்டல், லாட்ஜ், பால் பண்ணை, கரும்பு சார்ந்த துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். விற்பனை செய்து லாபத்தை குவிப்பார்கள். சமையலில் சிறப்பாக செயல்படுவார்கள்.
ரோகிணி நட்சத்திர திசைப் பலன்கள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
சந்திரன் அதிபதி என்பதால் முதல் 10 வருடங்கள் சந்திரன் திசை நடக்கும். நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகளை சந்திக்க வேண்டியது இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் பிரச்னை உண்டாகும். சலி தொடர்பான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும்.
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
செவ்வாய் தசை காலத்தில் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். குடும்பம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். முன் கோபம் அதிகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள் அடிக்கடி ஏற்படும்.
ராகு தசை - 18 ஆண்டுகள்
ராகு தசை காலத்தில் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். கல்வியிலும், புதிய வேலை கிடைப்பதிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். தேவையற்ற நட்பு, பழக்க வழக்கங்களால் பிரச்னைகள் உண்டாகலாம். கோபம், பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும்.
குரு தசை - 16 ஆண்டுகள்
குரு தசை 16 வருடங்கள் வாழ்வில் ஏற்றம் தரக்கூடியதாக இருக்கும். முன்னேற்றம், சாதனை படைக்கவும், சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நிதி நிலை முன்னேறும், முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
சனி தசை - 19 ஆண்டுகள்
சனி தசை காலத்தில் ஏற்றமும், சமூகத்தில் பெயர், புகழ் உண்டாகும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சாதனைகள் பல படைப்பீர்கள்.
புதன் தசை - 17 ஆண்டுகள்
புதன் திசை மாரக திசை என்றாலும் சுப கிரகங்களின் பார்வை இருப்பின் சுப பலன்கள் கிடைக்கும். இல்லையேல் சங்கடங்களை சந்திக்க நேரிடும்.
வழிபாடு மற்றும் பரிகாரங்கள்
வழிபட வேண்டிய விருச்சம்: நாவல் மரம்.
வழிபாடு: ரோகிணி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கழுகு மலை ஜம்பு நாத ஈஸ்வரர் அகிலேண்டஸ்வரி ஆலயத்திலுள்ள நாவல் மரம் வழிபாடு செய்யவும்.
சுப காரியம் நடக்க உச்சரிக்க வேண்டிய மந்திரம்:
பிரஜாபதி சதுர்பாஹீ ; கமண்டலு அஷ ஸீத்ரத்ருத் வரா அபயகர ; ப்தே; ரோகிணி தேவதா அஸ்துமே
திருமண பொருத்தம்
ரோகிணி நட்சத்திரம் சந்திரன் ஆளக்கூடியது என்பதால் திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம் போன்ற நட்சத்திரங்கள் சேர்க்கக்கூடாது. ரஜ்ஜு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரங்களை தவிர்ப்பது நல்லது.