சங்கரன்கோவில் திருத்தலத்தில் நடைபெறும் ஆடித் தபசு விழா, பார்வதி தேவிக்கு சங்கரநாராயணராக சிவனும் நாராயணனும் காட்சியளித்த மிக முக்கியமான தெய்வீக நிகழ்வாகும். இந்த அற்புதமான விழாவை பற்றிய முழு விவரங்களையும், அதன் ஆன்மீக முக்கியத்துவத்தையும் இங்கே காணலாம். இது ஜோதிடம், முருகன் ஆலயங்கள் மற்றும் தமிழ் ஆன்மீகம் பற்றிய தகவல்கள் நிறைந்த jothidam360.in இன் ஒரு சிறப்புப் பதிவு.
ஆடித் தபசு விழாவின் பின்னணி
ஆடி மாதத்தில் கொண்டாடப்படும் விழாக்களில் சங்கரன்கோவில் திருத்தலத்துடன் தொடர்புடைய அற்புதமான விழா ஆடித் தபசு விழா ஆகும். புன்னை வனத்தில் ஊசி முனையில் நின்று பார்வதி தேவியின் கடும் தவத்திற்கு இறங்கி சிவனும் நாராயணனும் இணைந்து ஒரே ரூபமாக "சங்கரநாராயணராக" காட்சியளித்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர். இந்த திருநாள் ஆடி மாத பௌர்ணமி தினமாகும். அந்த நாளையே ஆடித்தபசு நாளாக கொண்டாடுகிறோம்.
ஒரு பாகத்தில் தலையில் சடாமுடி கங்கை பிறையுடன் நெற்றியில் திருநீற்று பட்டை, கழுத்தில் பாம்பு ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல், கையில் அங்குசமும் அணிந்த கோலமாகவும், மற்றொரு பாகத்தில் தலையில் கிரீடம், நெற்றியில் திருநாமம், கழுத்தில் துளசி மாலை, இடுப்பில் பட்டு பீதாம்பரம், கையில் சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் நாராயணரும் இணைந்து பார்வதி தேவிக்கு சங்கர நாராயணராக காட்சியளித்தார்கள்.
சிவபெருமான் துன்பங்களை அழிக்கும் கடவுள், நாராயணர் சகல ஐஸ்வர்யங்களையும் தந்து காக்கக்கூடிய கடவுள். அன்னை அம்பிகை எந்த குறைகள் இருந்தாலும் அவற்றை நீக்கி சுகமான வாழ்வு தரக் கூடியவர். இவர்கள் மூவருக்கும் உரிய நாளான ஆடித் தபசு நன்னாளில் சங்கரநாராயணர் ஆலயம் சென்று வழிபட்டு வர, சிவபெருமான், அம்பிகை மற்றும் திருமாலின் அருளாசிகள் முழுமையாக கிடைக்கப் பெறுவார்கள்.
வழிபாட்டு முறைகளும் பலன்களும்
சங்கரன்கோவிலுக்கு நேரில் சென்று வழிபட முடியாதவர்கள் அருகில் உள்ள சிவனும் விஷ்ணுவும் இணைந்த கோவிலுக்கோ அல்லது ஏதாவது ஒரு சிவன் கோவிலுக்கோ சென்று வழிபடலாம். இது ஜோதிடம் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் மிகுந்த பலன்களை அளிக்கும் ஒரு நாள்.
- சங்கரநாராயணர் சன்னிதியில் காலை நடைபெறும் பூஜையில் துளசி தீர்த்தம் வழங்கப்படுகிறது.
- பகல், மாலை மற்றும் இரவு நேரப் பூஜைகளில் திருநீறு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
- சங்கர நாராயணருக்கு வில்வமும், துளசியும் சாத்தப்படுகிறது.
- இங்கு சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது. ஸ்படிக லிங்கமாக வெள்ளிப் பேழையில் உள்ள சந்திர மவுலீஸ்வரருக்குத் தான் அபிஷேகம் செய்கிறார்கள்.
இந்த நாளில் சிவன், அம்பிகை, திருமால் என மூவரில் யாரை வழிபட்டாலும், மூவரையும் வழிபட்டாலும் வேண்டிய வரங்கள் கிடைக்கும். அம்பிகை காத்திருந்து, தவம் செய்ததால் அவர் விரும்பி சங்கர நாராயணர் திருக்கோலத்தை ஈசன் காட்டி அருளினார். அதே போல் ஆடித்தபசு நாளில் தன்னை வழிபடுபவர்களுக்கு நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் வேண்டுதல்கள் அனைத்தையும் சிவ பெருமான் இந்த நாளில் நிறைவேற்றி வைப்பார் என்பது நம்பிக்கை. ஆடி மாதத்தில் வரும் மிக சிறப்புக்குரிய இந்த நாளில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது அம்மனின் அருளை பெற்றுத் தரும்.
ஆடித் தபசு விழா நிகழ்வுகள்
இத்தலத்தில் ஆடித்தபசு விழா 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா ஜூலை 28ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதியும், விழாவின் சிகர நிகழ்வான ஆடித்தபசு காட்சி ஆகஸ்ட் 7ஆம் தேதியும் நடைபெறுகிறது.