ஆரோக்கியமான உடல் தான் நாம் எந்த செயலை செய்வதற்கும் அடிப்படை. குறிப்பாக, ஆன்மீகப் பயணங்கள் மேற்கொண்டு முருகன் ஆலயங்களை, குறிப்பாக ஆறுபடை வீடுகளை தரிசிக்க உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம். ஜோதிடம் கூறும் வழிகாட்டுதல்கள் பல இருந்தாலும், சித்த மருத்துவம் போன்ற தமிழ் மருத்துவ முறைகள் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்த தமிழ் மருத்துவக் குறிப்புகளில் சுண்டைக்காயின் பங்கு மிகவும் முக்கியமானது.
உடலை நச்சு இல்லாமல் வைப்பது என்பது இப்போதைய பழக்கமல்ல. இது நம் முன்னோர்கள் காலம் முதலே தொடங்கிய ஒரு பழக்கம். பெரும்பாலான உடல் நோய்கள் உடல் கழிவுகளாலேயே வந்துவிடுகிறது. மருந்தை உணவாக்கி எடுத்தது போன்று உடல் நச்சுக்களையும் உணவை கொண்டு விரட்டியவர்கள். அந்த வகையில் உடலில் இருக்கும் ஒட்டுண்ணிகளை வெளியேற்றி வயிற்றை சுத்தம் செய்யும் சுண்டைக்காயை எப்படி எடுப்பது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்
சுண்டைக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. காய்கறிகளில் சிறிய காய் என்றாலும் இதன் நுண் ஊட்டச்சத்துக்களின் சேமிப்புக்கிடங்கு என்று இதை சொல்லலாம். வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் இ போன்ற சத்துக்களையும் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது. இது நரம்பு மண்டலத்துக்கு சக்தி கொடுக்கும். காய்ச்சல் நேரத்தில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்யும். மூட்டு வலிகளை கூட நிர்வகிக்க உதவும். இத்தனை மருத்துவ குணங்கள் வாய்ந்த சுண்டைக்காயை குடல் புழுக்கள் விரட்ட எப்படி சாப்பிடுவது என்பதை பார்க்கலாம்.
குடல் புழு வெளியேற்றும் சுண்டை வற்றல் சூரணம்
சுண்டை வற்றல் சூரணம் என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இதை வாங்கி வந்து காலையில் 6 மணிக்கு கால் டீஸ்பூன் சூரணத்தில் கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய் கலந்து குழைத்து சாப்பிட வேண்டும். விளக்கெண்ணெய் சாப்பிடுவது கடினம் என்பவர்களுக்கு மோரில் கலந்து கொடுக்கலாம். இவையே புழுக்களை வெளியேற்ற போதுமானதாக இருக்கும். சூரணமாக விளக்கெண்ணெயில் எடுக்கும் போது அடிக்கடி எடுக்க வேண்டாம். மாதம் ஒருமுறை எடுத்தாலே போதுமானது.
சுண்டை வற்றல் சாப்பிட்ட பிறகு செய்யக்கூடாதவை
- சுண்டை வற்றல் சூரணம் சாப்பிட்ட பிறகு டீ, காஃபி போன்ற எந்த பானங்களும் கொடுக்க கூடாது. அப்படி செய்தால் புழுக்கள் வெளியேறாது.
- அன்றைய தினம் செரிமானத்தை அதிகம் பாதிக்கும் உணவுகள் எடுக்க கூடாது.
- அதிக மசாலா, அதிக எண்ணெய், அதிக இனிப்பு, அதிக காரம் என்று இல்லாமல் மென்மையான உணவுகளை எடுக்க வேண்டும்.
- இந்த சூரணத்தை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.
6 முதல் 12 வயது பிள்ளைகளின் குடல் புழுக்கள் வெளியேற என்ன செய்ய வேண்டும்?
6 முதல் 12 வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு சுண்டைக்காயை குழம்பு அல்லது வற்றல் வடிவில் கொடுக்கலாம். சூரணம் கண்டிப்பாக கொடுக்க கூடாது. சுண்டைக்காயை வாங்கி அதை இலேசாக இடித்து மோரில் ஊறவைத்து வெயிலில் காயவிட வேண்டும். மீண்டும் இரவில் மோரில் ஊறவைத்து மறுநாள் காலை வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். இப்படி மோரில் ஊறிய சுண்டைக்காய் நன்றாக வெயிலில் உலர்ந்ததும் பதப்படுத்தி வைத்துகொள்ள வேண்டும். இதை வறுத்து கொடுத்தாலே வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேறிவிடும். சிறு குழந்தைகள் அதிக கசப்பு என்றால் பனைவெல்லம் சேர்த்து கொடுக்கலாம். அதே போன்று சுண்டைக்காயை குழம்பு வைத்து சாப்பிட்டாலும் வயிற்றுப்பூச்சிகள் வெளியேறும். குழந்தைகள் அடிக்கடி வயிறு வலி, ஆசன வாயில் பூச்சி நெளிதல் போன்ற பிரச்சனையை சொல்லும் போது வாரம் ஒரு முறை சுண்டைக்காயை உணவாக கொடுத்தால் பலன் கிடைக்கும்.
சுண்டைக்காய் சாப்பிடுவதன் நன்மைகள்
- இரத்த சோகை தடுப்பு: குடல் புழுக்கள் வயிற்றில் இருக்கும் இரத்தத்தையும், உணவின் ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சிவிடுவதால் இரத்த சோகை வரலாம். சுண்டைக்காய் இதை தடுக்கும்.
- வயிற்றுக் கோளாறுகள் சீர்: சுண்டை வற்றல் சிறந்த புரோபயாட்டிக் ஆக செயல்பட்டு, வயிறு உப்புசம், வயிற்றுக் கோளாறு, செரிமான பிரச்சனை போன்றவற்றை சரி செய்யும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொறுப்பு துறப்பு:
இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நோக்கங்களுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக இல்லை. மேலும் விவரங்களுக்கு எப்போதும் மருத்துவரை அணுகவும். இங்கு வழங்கப்பட்ட தகவலின் துல்லியம், நம்பகத்தன்மைக்கு ஜோதிடம்360 பொறுப்பேற்காது.