சன் ஸ்க்ரீன் பயன்படுத்துவது சருமத்திற்கு பாதுகாப்பானது அல்லது புற்றுநோயை உண்டாக்கும் என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, பிரபல சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல் இதன் உண்மை நிலையை விளக்குகிறார். சன் ஸ்க்ரீன் பற்றிய பயமுறுத்தும் தகவல்கள் வதந்தியா? அல்லது அறிவியல் உண்மையா? வாருங்கள் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.
சன் ஸ்க்ரீன் வரலாறு: ஆரம்பகாலக் குழப்பங்களும் தற்போதைய தெளிவுகளும்
ஆரம்ப காலங்களில் சன் ஸ்க்ரீன்கள் அறிமுகப்படுத்தப்பட்டபோது, புற ஊதாக் கதிர்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சைத் தடுப்பதற்காக சில சன் ஃபில்டர்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த ஆரம்பகால முயற்சிகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சில சன் ஸ்க்ரீன் ஃபில்டர்களில் சில குறைபாடுகள் இருந்தன. இருப்பினும், அவை அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டன.
இன்றைக்கு சமீப காலங்களில் தயாரிக்கப்படுகிற சன் ஸ்க்ரீன்களில் பயன்படுத்தப்படும் ஃபில்டர்களில் மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை என்று எவையும் இல்லை. குறிப்பாக, சிலர் பயமுறுத்தும் வகையில் புற்றுநோயை உண்டாக்குவதோ அல்லது ஹார்மோன் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோ கிடையாது.
சன் ஸ்க்ரீன் கட்டாயம் அப்ளை செய்யணுமா?
இன்றைய வெயில், கடுமையான புற ஊதாக் கதிர்களின் தாக்கம், அதனால் ஏற்படுகிற சருமப் பாதிப்புகள், அதிகமான லைட் வெளிச்சங்களில் இருப்பது, கேஜெட்டுகள் அதிகமாக பயன்படுத்தும்போது அதிலிருந்து வரும் கதிர்வீச்சுகள் ஆகியவை சருமத்தை மிக மோசமாக பாதிக்கும். அதனால், சரும பாதுகாப்புக்கு சன் ஸ்க்ரீன் கட்டாயம் அப்ளை செய்தே ஆக வேண்டும். உங்கள் சருமம் மிக வேகமாக பாதிக்காமல் இருக்க வேண்டுமென்றால், சன் ஸ்க்ரீன் கட்டாயம் அப்ளை பண்ணுங்க என்று சரும நிபுணர் டாக்டர் ஸ்வேதா ராகுல் வலியுறுத்துகிறார்.
சன் ஸ்க்ரீன் போட்டால் ஸ்கின் கேன்சர் வருமா? - வதந்தியும் அறிவியலும்
காலங்காலமாக இப்படி ஏதாவது வதந்திகள் வந்து கொண்டே தான் இருக்கும். மேலே சொன்னது போல சன் ஸ்க்ரீன் சருமப் புற்றுநோயை உண்டாக்கும் என்பதற்கு எந்தவித அறிவியல் ஆதாரங்களும் கிடையாது. அதனால் எந்த வதந்திகளையும் நம்பாமல் அறிவியலை நம்புங்கள் என்று டாக்டர் ஸ்வேதா ராகுல் குறிப்பிடுகிறார். இறுதியாக, சன் ஸ்க்ரீன் சருமத்தை அதிகப்படியான ரேடியேஷன் மற்றும் சூரியக் கதிர்வீச்சுகளில் இருந்து பாதுகாக்கிறது என்பதுதான் அறிவியல் ஆய்வாக இருக்கிறது.
நாள் முழுக்க சன் ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டுமா?
சன் ஸ்க்ரீனை குறிப்பிட்ட இடைவெளியில் மறுபடியும் அப்ளை செய்வது நல்லது. ஆனால், சன் ஸ்க்ரீன் விலையும் அதிகம் என்பதால் எல்லா நேரத்திலும் போட முடியாது. சோசியல் மீடியாக்கள் சொல்லும் கதைகளால் பயமா இருக்கிறது என்று நினைப்பவர்கள் நாள் முழுக்க கூட போடத் தேவையில்லை.
சன் ஸ்க்ரீன் பயன்படுத்த சில முக்கிய குறிப்புகள்:
- வெளியில் செல்லும்போது சன்ஸ்க்ரீன் கட்டாயம் போடுங்கள்.
- அதிகமாக லைட்களில் இருக்கும்போது மற்றும் கேஜெட்டுகள் பயன்படுத்தும் போது ஆகிய சமயங்களில் அப்ளை செய்யுங்கள்.
- முகம் மற்றும் கழுத்து தவிர மற்ற இடங்களை வெளியில் செல்லும்போது சூரியக் கதிர்வீச்சு பாதிக்காமல் முழுமையான துணியால் கவர் செய்து கொள்ளுங்கள்.
- நீங்கள் சன் ஸ்க்ரீன் வாங்கும்போது எது உங்களுடைய சருமத்துக்கு ஏற்றது என்பதை ஒரு சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெற்ற பின் வாங்குவது இன்னும் பாதுகாப்பானது.