முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் சிறப்பானது திருச்செந்தூர். இங்கு முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறியதோடு, அவர் தவக்கோலத்தில் சிவ பூஜை செய்து காட்சி தருகிறார். இத்தலத்திற்கு வரும் பக்தர்கள், முருகனை சரியான முறையில் வழிபட்டால் மட்டுமே முழு பலனையும் பெற முடியும். திருச்செந்தூர் முருகன் ஆலயங்களில் ஒன்று மட்டுமல்ல, இது ஒரு சக்திவாய்ந்த ஜோதிட பரிகாரத் தலமாகவும் கருதப்படுகிறது. தமிழ் மக்களின் வாழ்வில் வளம் சேர்க்கும் இந்த அற்புதத் தலத்தில் திருச்செந்தூர் முருகனை வழிபடும் முறைகளை இங்கே காண்போம்.
திருச்செந்தூர் முருகன் வழிபாட்டின் முக்கியத்துவமும் சிறப்புகளும்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் அதிகமான பக்தர்களால் போற்றி, கொண்டாடப்படும் தலமாக இருப்பது திருச்செந்தூர். இதுவே முருகப் பெருமானின் அவதார நோக்கம் நிறைவேறிய தலமாக கருதப்படுகிறது. முருகப் பெருமான் தவக்கோலத்தில், சிவ பூஜை செய்த நிலையில், கையில் தாமரை மலருடன் காட்சி தரும் ஒரே முருகன் ஆலயம் திருச்செந்தூர் திருத்தலம் தான். இங்கு செல்லும் பக்தர்கள் முறையாக முருகப் பெருமானை வழிபட்டால் மட்டுமே அதன் முழு பலனும் கிடைக்கும். இங்கு கடல் மட்டத்திற்குக் கீழாக சிறு குன்றின் மேல் கடலை பார்த்தவாறு சுவாமி வீற்றிருப்பார். பிறவி பிணியைப் போக்கி தலையெழுத்தை மாற்றக் கூடியவர் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று மும்மூர்த்திகளின் வடிவில் தொழில்களைச் செய்பவராக திருச்செந்தூரில் மட்டுமே முருகன் அருள் புரிகிறார்.
திருச்செந்தூர் முருகனை வழிபடும் சரியான முறை:
- முன் தயாரிப்பு: முருகன் அனுமதித்தால் மட்டுமே திருச்செந்தூர் செல்ல முடியும். வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் ஒரு தீபம் ஏற்றி முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு முருகனிடம் "நீயே துணை உன்னை நம்பி வருகிறேன்" என உங்கள் வேண்டுதலை சொல்லி மனதார வழிபடவும். வீட்டிலிருந்து புறப்படும் போது ஒரு ரூபாய் நாணயம் மற்றும் வெள்ளை துணியில் மஞ்சள் தடவி எடுத்து வரவும்.
- புனித நீராடல்: முதலில் கடலில் குளித்து தான் நாழிக்கிணற்றில் நீராட வேண்டும். நாழிக்கிணற்றில் நீராடிய பிறகு எந்த நீரிலும் குளிக்க கூடாது. முருகப்பெருமான் வேலால் உருவாக்கிய தீர்த்தம் நாழிக்கிணறு. இதை கந்த புஷ்கரணி என்றும் அழைக்கிறார்கள். ஈர உடைகளை மட்டும் மாற்றிக் கொள்ளவும், ஈர உடைகளுடன் கோவிலுக்குள் செல்ல கூடாது.
- விநாயகர் மற்றும் குருமார்கள்: முதலில் தூண்டுகை விநாயகருக்கு தலையை சுற்றி ஒரு சிதறு தேங்காய் உடைத்து வழிபடவும். இங்கு வைக்கும் வேண்டுதல் முருகனை சென்றடையும் என்பர். நாழிக்கிணறு அருகே திருச்செந்தூர் கோவிலை புனரமைத்த (மூவர் சமாதி) மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகளை வழிபட்ட வேண்டும்.
- மூலவர் தரிசனம்: பிறகு கோவிலுக்குள் சென்று மூலவரான சுப்பிரமணியர் கிழக்கு நோக்கியும், சண்முகர் தெற்கு நோக்கியும் இருப்பர். அவர்களை வழிபட வேண்டும். முருகனின் நாமங்களை மட்டும் மனதார உச்சரித்துக் கொண்டே கண்ணார பார்த்து வணங்க வேண்டும். இங்கு கொடுக்கும் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் பலவித நோய்கள், செய்வினை தோஷங்கள் நீங்கும்.
- உட்பிரகார தெய்வங்கள்: முருகன் சந்நிதிக்கு பின்புறம் உள்ள முருகன் கைகளால் பிரதிஷ்டை செய்த பஞ்சலிங்கங்களை வழிபட வேண்டும். பிறகு குரு சன்னதிக்கு சென்று கண்டிப்பாக வழிபட வேண்டும். முடிந்தால் இரண்டு நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் பிரச்சனை சரியாகவும், வருமானம் பெருகவும், ஜாதகத்தில் குருவால் வரும் பிரச்சனை அனைத்தும் சரியாகும். பிறகு கோவிலில் உட்பிரகாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை, சண்டிகேஸ்வரர், நடராஜர், சனிபகவான், பைரவரை வழிபடவும். பால சுப்பிரமணியர், மயூரநாதர், சம்ஹார மூர்த்தி மற்றும் சகஸ்ர லிங்கமாய் இருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். பிறகு பெருமாள் சன்னதி, அங்கு மலையை குடைந்து வீற்றிருக்கும் பள்ளிகொண்ட பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும்.
- கொடிமரம் வேண்டுதல்: கோவிலின் கொடிமரத்தில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து உங்களின் வேண்டுதலை சொல்லி வேண்டிக் கொண்டு, அந்த நாணயத்தை முடிந்து வைக்க வேண்டும். வேண்டுதல் நிறைவேறி நாணயத்தை முருகனிடம் ஒன்றிற்கு பத்தாக திரும்ப காணிக்கையாக செலுத்தி விட வேண்டும். கொடி மர கல்யாண விநாயகரை வணங்கி வழிபாட்டை நிறைவு செய்து பிரசாதம் சாப்பிட்டுவிட்டு வெளியே வரவும்.
- வள்ளி குகை மற்றும் சந்தன மலை: கடற்கரையில் வள்ளி குகைக்கு அருகில் உள்ள சந்தன மலை மீது தொட்டில் கட்டி வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். வள்ளி அம்மனை தரிசனம் செய்கின்ற பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடும். கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீங்கும்.
- பக்தி நெறிகள்: முருகனுக்கு சிறிதளவாவது பூக்கள் வாங்கி செல்லவும். குறைந்தது 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை கோவிலில் இருக்க வேண்டும். பெண்கள் பாரம்பரிய உடை அணிந்தும், ஆண்கள் மேல் சட்டை இன்றி துண்டு மட்டும் போட்டுக் கொண்டு கோயிலுக்குள் செல்ல வேண்டும். கோவிலில் அமர்ந்து கந்த சஷ்டி கவசம் படிக்கவும். முருகன் மூல மந்திரம் சொல்லலாம். முடிந்தால் இரவு தங்கி பள்ளியறை பூஜை பார்த்தால் வாழ்வில் அற்புதம் நடக்கும்.
- முன்னேற்றத்திற்கான தரிசனம்: திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்ய இறங்கி சென்று தரிசனம் முடித்து விட்டு ஏறி வரவேண்டும். இதனால் நம் வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொடுக்கும்.