Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

வைகாசி விசாகம் 2025: விரதம், பூஜை, பலன்கள்

வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர திருநாளே வைகாசி விசாகம். குழந்தை வடிவில் காட்சி தரும் முருகப் பெருமானை இந்த நாளில் வணங்குவது மிகவும் விசேஷமானது. வாழ்க்கையில் அனைத்து வளங்களையும் பெற, முருகனின் அருளை வேண்டி விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இந்த சிறப்புமிக்க நாளில் முருகப்பெருமானை எவ்வாறு வழிபடுவது, அதன் பலன்கள் என்ன, மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான வைகாசி விசாக தேதி குறித்த முழு தகவல்களை இங்கே காண்போம்.

வைகாசி விசாக திருநாள் என்றால் என்ன?

வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளை தான் வைகாசி விசாகமாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விசாகம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் வேறு நாட்களில் வருகின்றன. விசாகம் நட்சத்திரத்திலேயே முருகப் பெருமான் அவதரித்ததாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளதால், இந்த நாள் முருகப் பெருமானின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவது அனைத்து விதமான துன்பங்களையும் நீக்கி, சந்தோஷமான வாழ்வை அருளும் என்பது ஐதீகம். முருகன் அருளைப் பெற இந்த நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

வைகாசி விசாகம் 2025 - தேதி மற்றும் நேரம்

இந்த ஆண்டு ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமை வைகாசி விசாகம் வருகிறது. ஜூன் 08ம் தேதி பகல் 02.10 மணிக்கு துவங்கி, ஜூன் 09ம் தேதி மாலை 04.40 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. ஜூன் 10ம் தேதி பகல் 12.26 மணிக்கு தான் பெளர்ணமி துவங்குகிறது. அதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் ஜூன் 09ம் தேதியன்று விரதம் இருந்து, முருகப் பெருமானை வழிபடுவது சிறப்பு. பெளர்ணமி விரதம் இருப்பவர்கள் ஜூன் 10ம் தேதி அல்லது 11 ம் தேதி விரதம் இருந்து வழிபடலாம்.

யாரெல்லாம் வைகாசி விசாக விரதம் இருக்கலாம்?

வைகாசி விசாக விரதத்தை யார் வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக, பல காலமாக தீராத பிரச்சனைகளில் இருப்பவர்கள், உதாரணத்திற்கு திருமணத் தடைகள், குழந்தை பாக்கியமின்மை, நீண்ட காலமாக நீடித்த துன்பங்கள் என வாழ்க்கையில் சவால்களை சந்திப்பவர்கள் முருகப் பெருமானின் அருளைப் பெற இந்த நாளில் விரதம் இருக்கலாம். முருகப் பெருமானின் அருளைப் பெற்றுவிட்டால், அனைத்து விதமான துன்பங்களும் தூள் தூளாக நொறுங்கிப் போய்விடும் என்று அருணகிரிநாதர் கந்தர் அனுபூதியில் பாடியுள்ளார். ஜோதிட ரீதியாகவும் இந்த விரதம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

வைகாசி விசாகம் வழிபாடு செய்வதற்கான நேரம்

  • காலை 6 மணி முதல் 07.20 மணி வரை
  • காலை 09.10 மணி முதல் 10.20 மணி வரை
  • மாலை 6 மணிக்கு பிறகு (விசாகம் நட்சத்திரம் மாலை 04.40 மணி வரை மட்டுமே இருப்பதால் காலையில் வழிபடுவது மிகவும் சிறப்பு).

வைகாசி விசாகம் வழிபாட்டு முறை

  • வீட்டில் உள்ள முருகப் பெருமான் படத்தை சுத்தம் செய்து அழகிய மலர்களால் அலங்கரிக்கவும்.
  • வேல் அல்லது முருகப் பெருமான் விக்ரஹம் வைத்திருப்பவர்கள் அன்று பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு.
  • வீட்டில் படம் மட்டும் வைத்திருப்பவர்கள் அருகில் இருக்கும் முருகன் ஆலயங்களுக்கு சென்று அபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கலாம் அல்லது வீட்டில் பால் நைவேத்தியமாக படைக்கலாம்.
  • விளக்கேற்றி வைத்து முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற இனிப்புகளை நைவேத்தியமாகப் படைக்கலாம்.
  • எதுவும் செய்ய முடியாதவர்கள் 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைத்து மனதார வழிபடலாம்.
  • முருகனுக்குரிய எந்த பாடல், மந்திரம் தெரிந்தாலும் அதை படித்து வழிபடலாம். எதுவும் தெரியாதவர்கள், "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபடலாம்.

வைகாசி விசாகம் அன்று செய்ய வேண்டிய தானங்கள்

  • வைகாசி விசாகம் அன்று யாராவது ஒருவருக்காவது அன்னதானம் செய்வது சிறப்பு.
  • இது வெயில் காலத்தில் வரும் திருவிழா என்பதால் நீர் மோர், பானகம், விசிறி போன்ற குளிர்ச்சி தரக் கூடிய பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கலாம்.
  • முருகனின் மனம் குளிர வேண்டும் என்பதற்காக பால் குடம், பால் காவடி எடுத்து வந்து பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள். முருகனை மனதார நினைத்து மற்றவர்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை தானம் செய்தால் முருகப்பெருமான் மனம் மகிழ்ந்து அருள் தருவார் என்பது நம்பிக்கை.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் ஜூன் 09ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது.

திருமணத் தடை, குழந்தை பாக்கியமின்மை, நீண்டகால துன்பங்கள் உள்ளவர்கள் முருகப்பெருமான் அருளைப் பெற வைகாசி விசாக விரதத்தை கடைபிடிக்கலாம். இது அனைத்து பக்தர்களுக்கும் ஏற்ற ஒரு விரதமாகும்.

முருகன் படத்தை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, பால் நைவேத்தியம், சர்க்கரை பொங்கல் படைத்து, "ஓம் சரவண பவ" போன்ற மந்திரங்கள் ஜெபித்து வழிபடலாம். அருகில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபடுவதும் சிறப்பு.

Our Other Services