வாஸ்து சாஸ்திரம் என்பது நம் வீட்டின் அமைப்பை மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் விதிமுறைகள் அடங்கிய ஒரு அறிவியல். தமிழ் கலாச்சாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஜோதிடத்துடன் தொடர்புடைய வாஸ்து, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வர உதவுகிறது. குறிப்பாக, வாஸ்துவில் மிகச் சிறப்பான பலனைத் தரக்கூடிய வடகிழக்கு திசை அல்லது ஈசானிய மூலை குறித்த விதிகள் மற்றும் அங்கே படுக்கையறை அமைப்பது தொடர்பான முக்கிய தகவல்களை இங்கு விரிவாகக் காண்போம்.
வடகிழக்கு திசை என்றால் என்ன? (ஈசானிய மூலை)
வாஸ்து சாஸ்திரத்தில் வடகிழக்கு திசை 'ஈசான்ய மூலை' என அழைக்கப்படுகிறது. இந்த திசையை சுப கிரகமான குரு பகவானால் ஆளப்படக்கூடிய பவித்திரமான பகுதியாக பார்க்கப்படுகிறது. அதனால் இந்த இடத்தில் எப்படிப்பட்ட அறை அமைக்கலாம், என்னென்ன பொருட்களை வைக்கலாம் என தெரிந்து கொள்வது அவசியம். ஈசானிய மூலை புனிதமான இடமாக பார்க்கப்படுவதால், பொதுவாக இந்த பகுதியில் படுக்கையறையை வைக்கக்கூடாது என வாஸ்து விதிகள் கூறுகின்றன.
வாஸ்து சாஸ்திரத்தில் ஈசானிய மூலையின் முக்கியத்துவம் என்ன?
வடகிழக்கு திசையானது பிரம்மாவின் இடமாகக் கருதப்படுகிறது. இங்கு குரு பகவானின் அருள் நிறைந்திருக்கின்றது. அதனால் இந்த பகுதியில் வீட்டில் நேர்மறையான ஆற்றல் கொண்டு வரக்கூடியதாக அமைகிறது. வாஸ்து படி, இந்த திசையை வீடு கட்டும் போது மிக சரியாக திட்டமிட்டு, அதன் புனிதத்தன்மையை பாதுகாப்பது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் ஈர்க்கும்.
வடகிழக்கு திசையில் படுக்கையறை இருக்கலாமா?
ஈசானிய மூலை குருவின் அம்சம் பொருந்தியது. ஆனால் படுக்கை அறை, பணம், ஆடம்பரம் உள்ளிட்டவற்றிற்கு சுக்கிரன் சொந்தக்காரர். குருவும் - சுக்கிரனும் பகை கிரகங்கள் ஆவர். அதனால் இந்த பகுதியில் படுக்கையறையை அமைக்கக்கூடாது என வாஸ்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஈசானிய மூலையின் ஆற்றல் ஆன்மீகத்திற்கும் அறிவுக்கும் உகந்தது, தனிப்பட்ட உறவுகள் மற்றும் ஓய்வுக்கானது அல்ல.
ஈசானிய மூலையில் படுக்கையறை இருந்தால் ஏற்படும் விளைவுகள்
வாஸ்து சாஸ்திரத்தின்படி, வடகிழக்கு திசையில் அல்லது ஈசானிய மூலையில் படுக்கையறை அமைப்பதால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள், உறவுகளிடையே மன கசப்பு, பற்றாக்குறை, கடுமையான நோய் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், உங்களின் பொருளாதார நிலை குறைய வாய்ப்புள்ளது. தம்பதியிடையே தேவையற்ற சண்டை, மன கசப்பு இருந்து கொண்டே இருக்கும்.
யாருக்கு ஈசானிய மூலையில் படுக்கையறை உகந்தது?
பெரியவர்கள், குறிப்பாக கணவன் - மனைவி உள்ளிட்டோர் வடகிழக்கு திசையில் படுக்கையறை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. அதேசமயம், பதினேழு-பதினெட்டு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வடகிழக்கு பகுதியில் படுக்கையறை அமைக்கலாம் அல்லது அந்த அறையைப் படுக்கைக்கு பயன்படுத்தலாம். ஏனெனில் இந்த திசை அறிவுக்கு அதிபதியான குரு மற்றும் ஞானத்தின் அதிபதியான புதன் ஆகிய இருவரும் இணைந்த பகுதி என்பதால் குழந்தைகள் ஒழுக்கமாகவும், படிப்பில் கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்கள். மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான நீர் உறுப்பு இந்த பகுதியில் நிறைந்திருக்கும்.
லவ்கீக வாழ்க்கையில் நாட்டமில்லாத, ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட வீட்டில் உள்ள வயதான நபர்களுக்கும் இந்த வடகிழக்கு பகுதியில் படுக்கையறையை கொடுக்கலாம்.
முக்கிய வாஸ்து குறிப்புகள் (Key Highlights)
ஈசானிய மூலை குருவால் ஆளப்படும் புனிதமான திசை.
இது வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரக்கூடியது.
குரு மற்றும் சுக்கிரன் பகை கிரகங்கள் என்பதால், ஈசானிய மூலையில் படுக்கையறை தவிர்க்க வேண்டும்.
ஈசானிய மூலையில் படுக்கையறை இருந்தால் உறவுச் சிக்கல்கள், நிதி நெருக்கடி, நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு.
குழந்தைகள் மற்றும் ஆன்மீகத்தில் நாட்டமுள்ள வயதானவர்களுக்கு ஈசானிய மூலை படுக்கையறை ஏற்றது.