ஆனி உத்திர திருமஞ்சனம் என்பது ஆடல் அரசனான நடராஜப் பெருமானுக்கு நடத்தப்படும் ஒரு முக்கியமான அபிஷேக உற்சவம் ஆகும். இந்த சிறப்பு தினத்தில் நடராஜரை தரிசிப்பதன் மூலம் செல்வ வளம், மகிழ்ச்சி, துன்பங்களில் இருந்து விடுதலை, சிவ பெருமானின் முழுமையான அருள், திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு, பண நெருக்கடி மற்றும் உடல் உபாதைகளுக்கு தீர்வு ஆகியவை கிடைக்கும். இந்த கட்டுரையில் ஆனி உத்திர திருமஞ்சனத்தின் காரணங்கள், சிறப்புக்கள் மற்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் உற்சவங்கள் பற்றி விரிவாக காண்போம்.
ஆனி உத்திர திருமஞ்சனம் என்றால் என்ன?
நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடத்தப்படும். அவற்றுள் சித்திரை ஓணம், ஆனி திருமஞ்சனம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி ஆருத்ரா அபிஷேகம், மாசி சதுர்த்தசி ஆகிய ஆறு தினங்கள் அடங்கும். இதில் ஆனி மாத வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடத்தப்படும் அபிஷேகத்திற்கு ஆனி உத்திர திருமஞ்சனம் என்று பெயர். இது 'மகாஅபிஷேகம்' என்றும் அழைக்கப்படுகிறது. அனைத்து சிவன் கோயில்களிலும் இந்த உற்சவம் நடத்தப்பட்டாலும், சிதம்பரத்தில் இது 10 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆனி உத்திர திருமஞ்சனம் ஜூலை 02 ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
ஆனி திருமஞ்சனம் நடத்தப்படும் காரணம்
ஆன்மிக ரீதியாக ஆனி உத்திர திருமஞ்சனத்திற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. மாணிக்கவாசகருக்கு, சிவ பெருமான் குருந்த மரத்தடியில் காட்சி அளித்த தினம் ஆனி மாத உத்திர நட்சத்திர தினம் தான். மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவ பெருமானே தன்னுடைய கைப்பட திருவாசகத்தை எழுதியதுடன், மாணிக்கவாசகரையும் தில்லை சிதம்பரத்தில் தன்னுடன் ஜோதியாக ஐக்கியமாக்கிக் கொண்ட தினமும் இந்த ஆனி உத்திர நட்சத்திர நாளில் தான். இந்த தெய்வீக நிகழ்வுகளை சிறப்பிக்கும் விதமாகவே இந்த நாளில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. இது சிவ பக்தர்களுக்கும், ஜோதிடம் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கும் மிக முக்கியமான நாளாகும்.
சிதம்பரம் ஆனி திருமஞ்சனம் 2025 உற்சவங்கள்
சிதம்பரத்தில் நடைபெறும் 10 நாள் விழா நிகழ்வுகள்:
- ஜூன் 23 - கொடியேற்றம், பஞ்சமூர்த்திகள் வீதி உலா
- ஜூன் 24 - வெள்ளி சந்திர பிரபை வாகனம்
- ஜூன் 25 - தங்க சூரிய பிரபை வாகனம்
- ஜூன் 26 - வெள்ளி பூத வாகனம்
- ஜூன் 27 - வெள்ளி ரிஷப வாகனம்
- ஜூன் 28 - வெள்ளி கஜ வாகனம்
- ஜூன் 29 - தங்க கைலாச வாகனம்
- ஜூன் 30 - தங்க தேரில் பிக்ஷாடனர் உலா
- ஜூலை 01 - காலையில் மகா ரதோற்சவம், மாலை ராஜ சபையில் லட்சார்ச்சனை
- ஜூலை 02 - அதிகாலை 3 மணி முதல் மகா அபிஷேகம், பகல் 2 மணிக்கு ஆனி உத்திர தரிசனம்
- ஜூலை 03 - முத்துப்பல்லக்கு
மகா அபிஷேகம் மற்றும் ஆனி உத்திர தரிசனம்
சிதம்பரம் நடராஜருக்கு ஒவ்வொரு உற்சவத்தின் போதும் ஒவ்வொரு சபையில் அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். சித்திரை, ஆவணி, புரட்டாசி, மாசி ஆகிய மாதங்களில் நடக்கும் உற்சவங்களின் போது தில்லை கனகசபையில் வைத்து அபிஷேகம் நடத்தப்படும். அதேபோல் ஆனி மாத உத்திர திருமஞ்சனமும், மார்கழி மாத ஆருத்ரா தரிசனமும் ராஜ சபையில் வைத்து நடத்தப்படும்.
ஆனி திருமஞ்சனம் அன்று அதிகாலை 3 மணி துவங்கி தொடர்ந்து 6 மணி நேரம் திருநீறு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்படுவதற்கு மகா அபிஷேகம் என்று பெயர். அதன் பிறகு காலை 10 மணியளவில் நடராஜருக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரங்கள் நடத்தப்பட்டு, ரகசிய பூஜை நடைபெறும். அதன் பிறகு சிறப்பு அலங்காரத்தில் நடராஜ மூர்த்தியும், சிவகாமி அம்மையும் ராஜ சபையில் இருந்து சித்சபைக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இதற்கு ஆனி உத்திர தரிசனம் என்று பெயர். இந்த தரிசனம் பக்தர்களுக்கு அனைத்து விதமான நலன்களையும் வழங்கும்.