அதிமதுரம், அதன் பெயரிலேயே இனிப்புச் சுவையுடைய ஒரு அற்புத மூலிகை. ஆயுர்வேதத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படும் இது, பல்வேறு நோய்களுக்கும் குறிப்பாக சளி, இருமல், தொண்டை வலி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகிறது.
அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்
இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துவதற்கு அதிமதுரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இனிப்புச் சுவை காரணமாக பல லேகியங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
- ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி பண்புகள் நிறைந்தது.
- பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடும்.
- ஜீரணப் பாதையைச் சீராக்குகிறது, மலச்சிக்கலைத் தடுக்கிறது.
- குடல் புண், அல்சர், வாய்வுத் தொல்லை, அசிடிட்டி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு.
- நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பலப்படுத்தி, நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
- உயர் கொலஸ்டிரால், ரத்த அழுத்தம் சீராக்கி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
சளி, இருமல், தொண்டை வலிக்கு அதிமதுரத்தைப் பயன்படுத்துவது எப்படி?
இருமல், சளி மற்றும் தொண்டை வலியைக் குறைத்து, அதற்குக் காரணமான தொற்றுக்களையும் அழிக்கும் தன்மை அதிமதுரம் மூலிகைக்கு உண்டு. சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இது சிறந்த தீர்வாக இருக்கும். காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கும்போது இதை பல வழிகளில் பயன்படுத்தலாம், குறிப்பாக கஷாயமாக.
அதிமதுரம் கஷாயம் தயாரிக்கும் முறைகள்:
- முறை 1: அதிமதுர வேர்களை (கட்டை) லேசாகத் தட்டி, 2 டம்ளர் தண்ணீரில் 1 மணி நேரம் ஊறவிட்டு, பின் அடுப்பில் வைத்து பாதியாகச் சுண்டும் வரை கொதிக்க விட்டு குடிக்கலாம்.
- முறை 2: ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் அதிமதுரப் பொடியையும் அரை ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். நாட்டு மருந்து கடைகளில் பொடியாகவும் கிடைக்கும்.
- முறை 3: அதிமதுரப் பொடியுடன் 10 இடித்த துளசி இலைகள், 10 நசுக்கிய புதினா, ஒரு சிறு துண்டு நசுக்கிய இஞ்சி சேர்த்து மிதமான தீயில் 4-5 நிமிடங்கள் கொதிக்க விட்டு, வெதுவெதுப்பான நிலையில் குடிக்கலாம்.
வறட்டு இருமலுக்கு: ஒரு சிறிய (ஒரு இன்ச் அளவு) அதிமதுரக் கட்டையை வாயின் ஓரத்தில் அடக்கி வைத்துக் கொண்டு அதன் சாறை உமிழ்நீரோடு கலந்து விழுங்குங்கள். இது வறட்டு இருமலைக் குறைத்து, தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றை அழிக்கும்.