இந்து மதத்தில் கிரகணங்கள் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளாகக் கருதப்படுகின்றன. அறிவியல் ரீதியாக மட்டுமின்றி, ஆன்மீக ரீதியாகவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படும் கிரகணங்கள், உலக உயிர்களில் குறிப்பாக மனிதர்களில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் தீய விளைவுகளில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சந்திர கிரகணம் முடிந்ததும் சில குறிப்பிட்ட பரிகாரங்களைச் செய்வது அவசியம். ஜோதிட ரீதியாக கிரகணங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களில் இருந்து விடுபட, இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது சிறப்பு.
சந்திர கிரகணத்தின் முக்கியத்துவம்
கிரகணம் என்பது இந்து மதத்தில் மிக முக்கியமான காலமாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் என ஒரு ஆண்டுக்கு நான்கு அல்லது ஐந்து கிரகணங்கள் நிகழ்வது உண்டு. கிரகணம் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு வானியல் மாற்றம் என்றாலும் இது அறிவியல் ரீதியாக மட்டுமின்றி, ஆன்மீக ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரகண காலங்களில் நிகழும் இயற்கை மாற்றங்கள், உலக உயிர்களில் குறிப்பாக மனிதர்களில் குறிப்பிட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறிவியலும் ஒப்புக் கொண்டுள்ளது.
கிரகண நேரம் பெரும்பாலும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதாலேயே கிரகண நேரத்தில் செய்யக் கூடாத விஷயங்கள் என சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. இவற்றை தவிர்ப்பதால் கிரகணங்களால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்க முடியும். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். வழக்கமாக கிரகண நேரங்களில் அனைத்து கோவில்களிலும் நடைசாத்தப்பட்டிருக்கும். கிரகண சாந்தி பூஜை முடிந்த பிறகு, வழக்கமான பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
சந்திர கிரகணம் முடிந்ததும் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்
சந்திர கிரகணம் முடிவடைந்த பிறகு, அதன் தீய சக்திகளின் தாக்கம் நம்மை தாக்காமல் இருப்பதற்காகவும், புனிதம் பெறவும் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். ஜோதிட சாஸ்திரப்படி இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை:
- குளித்து சுத்தம் செய்தல்கிரகணம் முடிந்ததும் காலையில் எழுந்ததும் குளித்து விட வேண்டும். குறிப்பாக கல் உப்பு, மஞ்சள், வேப்பிலை கலந்த நீரால் குளிப்பது உடலை புனிதம் செய்வதோடு, கிரகண தோஷங்களை நீக்கும்.
- வீட்டை சுத்தம் செய்தல்குளித்த பிறகு, கல் உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரால் வீடு மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். இந்த புனித நீரை வீடு முழுவதும் தெளித்து, எதிர்மறை ஆற்றல்களை நீக்கலாம்.
- தெய்வங்களுக்கு பூஜை மற்றும் நைவேத்தியம்வீட்டில் உள்ள சாமி படங்களை மஞ்சள் கலந்த நீரால் துடைத்து விட்டு, ஏதாவது தீர்த்தம் இருந்தால் பூஜை அறையில் தெளித்து விடலாம். பூஜை அறையையும், வீட்டையும் புனிதமாக்கிய பிறகு வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். வீட்டில் சாமி சிலைகள், வேல் ஏதாவது வைத்திருந்தால் பால், சந்தனம், மஞ்சள் நீர், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். சாமிக்கு படைத்த நைவேத்தியத்தை முதலில் மற்றவர்களுக்கு கொடுத்த பிறகு தான் நாம் சாப்பிட வேண்டும்.
- வாகனங்களை சுத்தம் செய்தல்வீட்டில் உள்ள வாகனங்களையும் சுத்தமான தண்ணீரால் சுத்தம் செய்து, எலுமிச்சை கட்டுவதால் கிரகணத்தால் ஏற்பட்ட அபரிமிதமான தீயசக்திகளின் பாதிப்பில் இருந்து மீளலாம்.
- தான, தர்மங்கள் செய்தல்கிரகணத்திற்கு பிறகு தான, தர்மங்கள் செய்வது மிகவும் விசேஷமானதாகும். அதிலும் பால், அரிசி, தானியங்கள் போன்றவற்றை தானம் செய்வது சிறப்பு. இல்லாவிட்டால் முடிந்த அளவிற்கு இரண்டு பேருக்காவது அன்னதானம் செய்யலாம். இது புண்ணியம் சேர்க்கும் சிறந்த வழியாகும்.