மகாளய பட்சம் என்பது நம் முன்னோர்களை வழிபடுவதற்கான மிக முக்கியமான 15 நாட்கள் கொண்ட காலப்பகுதியாகும். இந்த புனிதமான நாட்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் அளித்து, தானங்கள் செய்வதன் மூலம் பித்ரு தோஷங்கள் நீங்கி, அவர்களின் முழுமையான ஆசிகளைப் பெறலாம்.
மகாளய பட்சத்தின் சிறப்பு அம்சங்கள்
பட்சம் என்றால் 15 நாட்கள் கொண்ட ஒரு கால அளவு. அதாவது பிரதமை திதி துவங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்களை இது குறிக்கும். மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களாகும். இந்த நாட்களில் பித்ருலோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம். வழக்கமான அமாவாசைகளில் நாம் யாருடைய பெயரைச் சொல்லி தர்ப்பணம் கொடுக்கிறோமோ அது அவர்களை மட்டுமே சேரும். ஆனால், மகாளய பட்சத்தில் நாம் அளிக்கும் தர்ப்பணம் நம்முடைய அனைத்து முன்னோர்களையும் சென்று சேரும் என்பது இதன் தனிச்சிறப்பு.
இந்த காலகட்டத்தில் அளிக்கப்படும் தானங்களை நம்முடைய முன்னோர்களே நேரடியாக வந்து ஏற்று, நமக்கு ஆசி வழங்குவதாகவும் நம்பப்படுகிறது. இதன் மூலம் நாம் பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட்டு, குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள், சுப காரிய தடைகள், பொருளாதார இழப்புகள் போன்றவற்றை நீக்கி, சுபிட்சத்தை பெற முடியும். மகாளய பட்சத்தில் தெரியாதவர்களுக்கும், இறந்து போன அனைத்து உயிர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம்.
இந்த ஆண்டு மகாளய பட்சத்தின் முக்கிய நாட்கள்:
- ஆரம்பம்: செப்டம்பர் 08, திங்கட்கிழமை
- மகாளய அமாவாசை: செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை
திங்கட்கிழமை (சந்திரனுக்குரிய நாள் - தாய் வழி உறவுகள்) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (சூரியனுக்குரிய நாள் - தந்தை வழி உறவுகள்) ஆகிய நாட்களில் மகாளய பட்சம் துவங்குவதும், முடிவடைவதும் மிகவும் விசேஷமானது. இதனால் தாய் மற்றும் தந்தை வழி முன்னோர்களால் ஏற்பட்ட சாபங்கள், தோஷங்கள் நீங்கி ஆசி கிடைக்கும்.
இந்த புண்ணிய காலத்தில் பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது, நாய்கள், காகங்கள் ஆகியவற்றிற்கு உணவளிப்பது, ஏழைகளுக்கு, முதியவர்களுக்கு உணவளித்து உதவுவது ஆகியவை மிகப் பெரிய புண்ணியத்தை சேர்க்கும். ஒரு வருடத்தில் கொடுக்க வேண்டிய 96 தர்ப்பணங்களில் மகாளய பட்சத்தின் 15 நாட்களும் கொடுக்கும் தர்ப்பணமும் அடங்கும். தை மற்றும் ஆடி மாத அமாவாசைகளை போலவே புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசையும், அதற்கு முந்தைய 15 நாட்களும் முன்னோர்களுக்காக வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து வழிபடுவது நற்பலன்களை தரும்.
மகாளய பட்சத்தின் முக்கிய நன்மைகள்
- பித்ரு தோஷம் நீங்கும்.
- முன்னோர்களின் முழுமையான ஆசி கிடைக்கும்.
- குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.
- சுப காரிய தடைகள் நீங்கும்.
- பொருளாதார இழப்புகள் குறையும்.