மதுரையின் அரசியான அன்னை மீனாட்சிக்கும், சுந்தரேஸ்வரரான சிவபெருமானுக்கும் நடைபெறும் திருக்கல்யாணம் என்பது வாழ்வில் மங்களம் பெருகும் ஒரு தெய்வீக நிகழ்வு. நேரில் சென்று தரிசிக்க இயலாதவர்கள் வீட்டிலேயே அன்னையின் அருளைப் பெறவும், தீர்க்க சுமங்கலியாக வாழவும் எப்படி வழிபட வேண்டும், தாலிச்சரடு மாற்ற உகந்த நேரம் என்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
உலகிற்கே தாயான மதுரை மீனாட்சி
தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்துவதற்காக சிவபெருமானின் திருவடிகள் பட்டு, புண்ணியம் பெற்ற தலம் மதுரை திருத்தலம். இங்கு தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் கருணை பொங்கும் அழகிய புன்னகை நிறைந்த திருமுகத்துடன் காட்சி தந்து, உலக உயிர்களுக்கு எல்லாம் அன்னையாக விளங்கும் மீனாட்சி அம்மன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருகிறாள். என்ன குறை, கவலையை சொல்லி முறையிட்டாலும் தாயாக வந்து காத்து, கண்ணீரை துடைத்து, அருள் மழையை பொழியக் கூடியவள் மீனாட்சி. மதுரை திருத்தலத்தில் அன்னை மீனாட்சிக்கே முதல் மரியாதை. இங்கு தாயாரை வழிபட்ட பிறகே சிவனை வழிபடும் வழக்கம் உள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் மகிமை
வருடத்தின் அனைத்து நாட்களும், அனைத்து மாதங்களும் திருவிழா நடக்கும் ஒரே கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தான். மதுரையில் 6 மாதங்கள் மீனாட்சி ஆட்சியும், மீதமுள்ள 6 மாதங்கள் சிவ பெருமானின் ஆட்சியும் நடைபெறுவதாக ஐதீகம். மதுரையில் வருடம் முழுவதும் திருவிழா நடக்கும் என்றாலும் வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். சித்திரை திருவிழாவின் போது ஆண்டுதோறும் அன்னை மீனாட்சிக்கு மதுரையின் அரசியாக பட்டாபிஷேகமும், மறுநாள் சுந்தரேஸ்வரரான சிவ பெருமானுடன் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுவது வழக்கம்.
மீனாட்சி திருக்கல்யாண தரிசன பலன்கள்
- அன்னையின் அருள் பரிபூரணம்: மீனாட்சி திருக்கல்யாணத்தை காண்பதால் அன்னையின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.
- திருமணத் தடை நீங்கும்: திருமண தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
- தோஷங்கள் விலகும்: மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்கள் மற்றும் பாவங்கள் நீங்கும்.
- மகிழ்ச்சி பெருகும்: வாழ்வில் மகிழ்ச்சி, நிம்மதி நிலைக்கும், மங்களம் பெருகும்.
- அனைத்து நலன்களும்: அன்னையின் அருளால் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வீட்டிலேயே மீனாட்சியை வழிபடும் முறை
இந்த ஆண்டு மீனாட்சி திருக்கல்யாணம் மே 08ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. முடிந்தவர்கள் மதுரைக்கு நேரில் சென்று அன்னை மீனாட்சியையும், சுந்தரேஸ்வரரையும் மணக்கோலத்தில் தரிசித்து வரலாம். நேரில் செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் திருக்கல்யாணத்தைக் கண்டு மகிழலாம். நம்முடைய வீட்டில் உள்ள மீனாட்சி அம்மனின் படத்திற்கு வாசனை மலர்கள் சூட்டி, சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரிக்கலாம். அன்னைக்கு ஏதாவது இனிப்பு நைவேத்தியம் செய்து படைக்கலாம். பாயசம், சர்க்கரை பொங்கல் என எது வேண்டுமானாலும் படைக்கலாம். முடியாதவர்கள் எளிமையாக வெற்றிலை பாக்கு, ஒரு வாழைப்பழம், மஞ்சள் கயிறு, குங்குமம், பூ போன்ற மங்களப் பொருட்கள் படைத்து வழிபடலாம். அன்றைய தினம் சுமங்கலி பெண்களுக்கு தாலிச்சரடு, குங்குமம் வாங்கி தானமாக கொடுப்பது மிகவும் நல்லது.
தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம்
மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடைபெறும் போது பெண்கள் பலருக்கும் தாலிச்சரடு மாற்றிக் கொள்ளும் வழக்கம் உண்டு. இதனால் மீனாட்சியின் அருளால் அவளை போலவே நமக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். மங்களமான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு தாலிச்சரடு மாற்ற நினைப்பவர்கள் காலை 08.35 மணிக்கு மேல் 08.59 மணிக்குள்ளான முகூர்த்த நேரத்தில் மாற்றிக் கொள்ளலாம். இந்த ஆண்டு வியாழக்கிழமை திருக்கல்யாணம் வருவதால் காலை 6 முதல் 07.30 மணியிலான நேரம் எமகண்டம் நேரமாகும். அது முடிந்த பிறகு பூஜை அறையை அலங்கரித்து தயார் செய்து வைத்து விட்டு, தாலிச்சரடில் திருமாங்கல்யம் ஆகியவற்றை கோர்த்து தயாராக சுவாமி படத்திற்கு முன்பு வைத்து விடலாம். அன்னை மீனாட்சிக்கு திருமாங்கல்ய தாரனம் நடைபெற்று முடிந்த பிறகு சுவாமி படத்திற்கு முன்பு வைத்த மாங்கல்யத்தை கணவரை கொண்டோ அல்லது அன்னை மீனாட்சியை வேண்டிக் கொண்டு நீங்களாகவே எடுத்து அணிந்து கொள்ளலாம்.
இந்த தெய்வீக நிகழ்வு தமிழ் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இதுபோன்ற ஆன்மீகத் தகவல்கள், உங்கள் வாழ்க்கைக்கான ஜோதிடக் குறிப்புகள், மற்றும் பல்வேறு முருகன் ஆலயங்கள், குறிப்பாக ஆறுபடை வீடுகள் குறித்த விரிவான வழிகாட்டிகளுக்கு ஜோதிடம்360.இன் (Jothidam360.in) இணையதளத்தைப் பார்வையிடலாம். தமிழ் மக்களின் கலாச்சாரத்திலும், வழிபாட்டிலும் முருகன் ஒரு முக்கிய கடவுளாவார். அன்னை மீனாட்சிக்கும், தமிழ் கடவுள் முருகனுக்கும் உரிய வழிபாடுகளை சரியாக அறிந்து கொள்வது உங்கள் வாழ்வுக்குச் சிறப்பு சேர்க்கும்.