தமிழ்நாடு அரசு, ஆன்மீக அன்பர்களுக்காக பல அற்புதமான யாத்திரை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட புகழ்பெற்ற முருகன் ஆலயங்களுக்கும், பிற சக்தி தலங்களுக்கும் குறைந்த கட்டணத்தில் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து வருகிறது. இந்த கட்டுரையில், ஜோதிட முக்கியத்துவம் வாய்ந்த நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு ஆன்மிக சுற்றுலா பற்றி விரிவாகப் பார்ப்போம். தமிழ்நாட்டின் தொன்மையான ஆன்மிக மரபுகளை இந்த சுற்றுலாவினால் அனுபவிக்கலாம்.
நவகிரக ஆன்மிக சுற்றுலா: ஒரு சிறப்புப் பார்வை
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் (கும்பகோணம் கிளை) சார்பில், ஒரே நாளில் 9 நவகிரக திருத்தலங்களுக்கும் சென்று சிறப்பு தரிசனம் செய்ய சிறந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 30,606 பக்தர்கள் இந்த ஆன்மிக சுற்றுலா சேவையைப் பயன்படுத்திப் பயனடைந்துள்ளனர்.
குறைந்த கட்டணத்தில் கும்பகோணத்தைச் சுற்றி உள்ள 9 நவகிரக பரிகார தலங்களுக்கும் பக்தர்களை அழைத்துச் சென்று, வரிசையில் காத்திருக்காமல் சிறப்பு தரிசனம் செய்ய வைக்கிறார்கள். காலை 5 மணிக்கு கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு, இரவு 8 மணிக்கு மீண்டும் கும்பகோணம் பஸ் ஸ்டாண்டில் இந்த ஆன்மிக பயணம் நிறைவடையும்.
இந்த சேவை வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. கட்டண விவரங்கள்: ஏசி அல்லாத பேருந்துகளுக்கு ரூ.750, ஏசி பேருந்துகளுக்கு ரூ.1350. இந்த சுற்றுலாப் பேருந்தில் ஒரு அனுபவம் வாய்ந்த வழிகாட்டி இருப்பார். இவர், ஒவ்வொரு ஆலயங்களின் வரலாறு மற்றும் ஜோதிட முக்கியத்துவம் பற்றி பக்தர்களுக்கு விளக்குவார். பிறமொழி பேசும் பக்தர்களுக்காக வாட்ஸ்ஆப்பில் வீடியோ வழிகாட்டி சேவையும் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு தரிசன அடையாள அட்டை வழங்கப்படும்.
பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காகவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படுகின்றன. உணவு மற்றும் விரைவான தரிசனம் போன்ற அனைத்து வசதிகளும் இவர்களே செய்து தருவதால், பக்தர்கள் சிரமமின்றி தங்கள் ஆன்மிக கடமைகளை நிறைவேற்றலாம்.
நவகிரக பரிகார ஸ்தலங்கள் பட்டியல்
இந்த சுற்றுலாவில் நீங்கள் தரிசிக்கப் போகும் நவகிரக ஆலயங்கள் மற்றும் அவற்றுக்குரிய கிரகங்கள்:
- சந்திர பரிகார ஸ்தலம் - திங்களூர்
- குரு பகவான் பரிகார ஸ்தலம் - ஆலங்குடி
- ராகு ஸ்தலம் - திருநாகேஸ்வரம்
- சூரிய பகவான் - சூரியனார் கோவில்
- சுக்கிர பகவான் - கஞ்சனூர்
- செவ்வாய் பரிகார ஸ்தலம் - வைத்தீஸ்வரன் கோவில்
- புதன் ஸ்தலம் - திருவெண்காடு
- கேது ஸ்தலம் - கீழப்பெரும்பள்ளம்
- சனி பகவான் - திருநள்ளாறு
இந்த புனித தலங்களை தரிசிப்பதன் மூலம் உங்கள் ஜோதிட ரீதியான தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
முன்பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்
இந்த சிறப்பு ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் tnstc.in என்ற இணையதளத்தின் வழியாகவோ அல்லது அதிலுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்தோ முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9443263988, 9489795509 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். உங்கள் ஜோதிட பரிகாரங்களுக்கான இந்த சிறந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!