Jothidam 360
Home Nakshatra Porutham Temple History ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம் பார்க்க GST கால்குலேட்டர் TNEB கால்குலேட்டர் Feedback

விநாயகர் வழிபாடு - முழுமையான வழிகாட்டி

தெய்வத்தன்மை பொருந்திய விநாயகப் பெருமான், தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்பதால் 'விநாயகர்' என்றும், அனைத்து கணங்களுக்கும் தலைவர் என்பதால் 'கணபதி' என்றும் போற்றப்படுகிறார். இந்த கட்டுரை விநாயகரின் தத்துவம், அவரது திருவுருவ அமைப்பு மற்றும் விநாயகர் சதுர்த்தி வழிபாட்டின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்குகிறது.

விநாயகரின் திருப்பெயர்களும், தத்துவமும்

"வி" எனும் எழுத்துக்கு இல்லாமை எனப் பொருள். "நாயகன்" எனும் சொல்லுக்கு தலைவன் என அர்த்தம். தனக்கு மேல் ஒரு தலைவன் இல்லை என்பதே விநாயகர் என்பதன் பொருள். அதேபோல், கணங்களுக்கு எல்லாம் பதி, அதாவது தலைவர் என்பதால் கணபதி என்று அழைக்கப்படுகிறார். விநாயகரின் பெயர்கள் அவரது தனித்துவமான தலைமைத்துவத்தை குறிக்கின்றன.

யானை தலை, கழுத்துக்குக் கீழே தேவ உடல், மிகப்பெரிய தொந்தி, நான்கு கைகள், வளைந்த துதிக்கை, கையில் மோதகம், பாசம், அங்குசம், இந்தப் பெரிய உருவத்தை தாங்கும் சிறிய வாகனமாக மூஞ்சுறு - இப்படியான ஒரு கலவைதான் விநாயகப் பெருமானின் திருவுருவம். இந்த உடலமைப்பு உலகின் அனைத்து உயிர்களிலும் தாம் கலந்து இருக்கும் தத்துவத்தைக் குறிக்கிறது. இது விநாயகர் தத்துவம் எனப்படுகிறது.

  • பாசம் ஏந்திய திருக்கரம்: படைத்தல் தொழிலைக் குறிக்கிறது.
  • அங்குசம் ஏந்திய திருக்கரம்: அழித்தலை குறிக்கிறது.
  • மோதகம் ஏந்திய திருக்கரம்: அருளை வழங்குகிறது.
  • துதிக்கை: மறைத்தலை குறிக்கிறது.

மொத்தத்தில், "ஓம்" எனும் தத்துவப் பொருளின் அடையாளமாகவே விநாயகப் பெருமான் விளங்குகிறார். ஆகவேதான், "ஓம் பிரணவானன தேவாய நம" என்பது கணபதியின் மந்திரங்களில் ஒன்றாக விளங்குகிறது. சூரியன், சந்திரன், அக்னி ஆகியவை கண நாதன் கணபதியின் மூன்று கண்களாகத் திகழ்கின்றன. பக்தர்களின் குறைகள் ஒன்று விடாமல் விரிவாகக் கேட்டு நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காகவே அகண்ட பெரிய செவிகள். அண்டங்களை எல்லாம் தம்முள் அடக்கியவர் விநாயகப் பெருமான் என்பதை இவரது பெருத்த வயிறு குறிக்கிறது. இவரது திருப்பாதங்கள் பக்தர்கள் வாழ்வுக்கு நல்வழி காட்டும் என விளக்கும் தத்துவப் பொருளாகவே கணபதியின் திருவுருவம் விளங்குகிறது.

விநாயகர் வழிபாட்டின் முக்கியத்துவம்

விநாயகர் சதுர்த்தி வழிபாடும், விநாயகர் வழிபாடும் ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது.

மண் என்பது உலக உயிர்களின் வாழ்க்கையுடன் ஒன்றுபட்ட ஒன்றாகும். அதிலும் களிமண் எளிதில் கரைக் கூடியதாகும். அதே போல் விநாயகப் பெருமானின் மனமும் எளிதில் கரையும் தன்மை கொண்டது. அவரை வழிபட்டால் நம்முடைய துன்பங்களும் எளிதாக கரைந்து விடும் என்பதை உணர்த்தவே களி மண் விநாயகரை வைத்து வழிபடுகிறோம்.

களி மண்ணால் செய்யப்பட்ட புதிய விநாயகர் சிலையை வாங்கி வந்து, வீட்டில் வைத்து, மந்திரங்கள் சொல்லி பூஜை செய்யும் போது அதில் விநாயகர் எழுந்தருள்வார். பூஜையின் நிறைவில் நாம் முன் வைக்கும் கோரிக்கைகளையும், அவைகள் நிறைவேறுவதற்கு தடையாக இருக்கும் விஷயங்களையும் விலக்கி, நம்முடைய வேண்டுதல்களை நிறைவேற்றி வைப்பார்.

நமக்கு ஏற்படும் துன்பம், தடை, தோல்வி ஆகியவற்றிற்கு நம்முடைய கர்மவினைகளே காரணமாக உள்ளன. கர்மவினைகள் நீங்கும் போகும் நம்முடைய கஷ்டங்கள், மனக்குறைகள் நீங்கி மகிழ்ச்சி கிடைப்பதுடன், முக்தி அடைவதற்கான வழியும் பிறக்கிறது. அதனால் தான் விநாயகரை வழிபட்டால் இந்த பிறவியில் இன்பங்களையும், இந்த பிறவிக்கு பிறகு அழியாத ஆனந்த நிலையான முக்தியும் கிடைக்கும் என்றார்கள்.

எளிய வழிபாட்டையும் ஏற்றுக் கொண்டு பெரும் புண்ணியங்களை, நன்மைகளை நமக்கு அருள்வதாலேயே விநாயகர் வழிபாடு அனைவரும் செய்வது அவசியம் என சொல்லப்படுகிறது. ஜோதிடம் ரீதியாகவும் விநாயகர் வழிபாடு தடைகளை நீக்கும் வல்லமை கொண்டது.

விநாயகர் வழிபாட்டின் முக்கிய பலன்கள்

  • தடைகளை நீக்கி வெற்றியைத் தருகிறார்.
  • கர்மவினைகளைக் குறைத்து மன அமைதியை அளிக்கிறார்.
  • குடும்பத்தில் சுபீட்சத்தை உண்டாக்குகிறார்.
  • முக்திக்கு வழி வகுக்கிறார்.
  • அனைத்து சுபகாரியங்களுக்கும் முதன்மை தெய்வம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

"தனக்கு மேல் தலைவன் இல்லாதவர்" என்பதே விநாயகர் என்பதன் பொருள்.

அவரது உடலமைப்பு உலகின் அனைத்து உயிர்களிலும் தாம் கலந்து இருக்கும் தத்துவத்தையும், படைத்தல், அழித்தல், அருள் புரிதல், மறைத்தல் ஆகிய நான்கு தொழில்களையும் குறிக்கிறது.

மண் எளிதில் கரையக்கூடியது. அதேபோல், விநாயகரின் மனமும் எளிதில் கரையும் தன்மை கொண்டது. அவரை வழிபட்டால் நம்முடைய துன்பங்களும் எளிதாக கரைந்து விடும் என்பதை உணர்த்தவே களிமண் விநாயகரை வைத்து வழிபடுகிறோம்.

விநாயகரை வழிபடுவதன் மூலம் கர்மவினைகள் நீங்கி, வாழ்வில் தடைகள் விலகி, மகிழ்ச்சி கிடைப்பதுடன், முக்தி அடைவதற்கான வழியும் பிறக்கிறது.

Our Other Services