உச்சந்தலையில் உள்ள செபாசியஸ் சுரப்பிகளால் உற்பத்தியாகும் செபம் என்பது நமது கூந்தல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அத்தியாவசியமான இயற்கை எண்ணெய் ஆகும். இது முடியின் மேலான இழைகளை உயவூட்டி, பாதுகாக்கிறது. இந்த செபத்தின் சீரான அளவு கூந்தலின் வறட்சியையும், அதிக எண்ணெய் பசையையும் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
உச்சந்தலை செபத்தின் முக்கிய நன்மைகள்
உச்சந்தலை செபம் என்பது கூந்தல் பராமரிப்பில் பல வழிகளில் முக்கியத்துவம் பெறுகிறது. அவை:
- இயற்கை கண்டிஷனர்: செபம் சருமம் மற்றும் கூந்தலுக்கு இயற்கையான கண்டிஷனராக செயல்பட்டு, முடிக்கு ஈரப்பதத்தையும் ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. இது முடி வறண்டு போவதைத் தடுக்கிறது.
- பிஹெச் சமநிலை: உச்சந்தலையின் பிஹெச் அளவை (4.5 முதல் 6.2 வரை) சமநிலையில் பராமரித்து, நோய்க்கிருமி தாக்குதல்களை எதிர்த்து, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது. ஆரோக்கியமான உச்சந்தலை முடி வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
- சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு: சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்களால் கூந்தல் சேதமடைவதைத் தடுக்கிறது. செபம் சீராக இருக்கும் போது, கூந்தல் டல்லான தோற்றத்திலிருந்து பாதுகாக்கப்படும்.
- கூந்தல் மென்மை: கூந்தலில் ஈரப்பதம் இல்லாதபோது ஏற்படும் வறட்சி, சிக்கு, பளபளப்பின்மை, முடி உதிர்தல் போன்றவற்றைத் தடுத்து, முடிக்கு ஈரப்பதம் அளித்து மென்மையாக வைக்க உதவுகிறது.
- முடி உராய்வைத் தடுக்கும்: முடி இழைகளை மென்மையாக உயவூட்டி, முடி உலர்ந்து போவதையும், உடைவதையும், நுனி முடி பிளவுபடுவதையும் தடுக்கிறது.
- தொற்று பாதுகாப்பு: செபத்தில் உள்ள ட்ரைகிளிசரைடுகள் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை உச்சந்தலை தொற்று, அரிப்பு, பூஞ்சை போன்ற பிரச்சனைகளிலிருந்து பாதுகாத்து, மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்கின்றன.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
உச்சந்தலையில் அதிகப்படியான செபம் சுரப்பு, எண்ணெய் பசையை அதிகரித்து, இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளுடன் இணைந்து முடி நுண்குழாய்களை அடைத்துவிடும். இதனால் மயிர்க்கால்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் முடி உதிர்தல் தூண்டப்படும். மேலும், அதிகப்படியான செபம் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் சூழலை ஏற்படுத்தி பொடுகு போன்ற பிரச்சனைகளை உண்டு செய்யும்.
உச்சந்தலை செபத்தை ஆரோக்கியமாக பராமரிக்க, போதுமான தண்ணீர் குடித்து நீரேற்றமாக இருப்பதும், பழங்கள், காய்கறிகள், ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதும் அவசியம். மன அழுத்தத்தைக் குறைக்க யோகா போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். சரியான முறையில் தலைக்கு குளிப்பதும், வாரம் ஒருமுறை ஸ்கால்ப் மசாஜ் செய்வதும் உச்சந்தலை இரத்த ஓட்டத்தை அதிகரித்து மயிர்க்கால்களை வலுப்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதிக செபம் சுரக்காமலும், குறைவாக சுரக்காமலும் சமநிலையில் இருப்பது முடி வளர்ச்சிக்கு சிறந்தது.